மழையில் துளிர்த்த என் நினைவு!

Nov 29, 2025,05:19 PM IST
- ஆ.வ.உமாதேவி 

மழை வந்தாலே எனக்கு, இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும்.

நான் பத்து மாத குழந்தையாக இருந்த போதே என் தாத்தாவும் பாட்டியும் என்னை எடுத்துச் சென்று வளர்த்தனர். அவர்கள் வளர்த்ததால், அவர்கள் மீது எனக்கு அளவில்லா பாசம். எனக்கு திருமணம் ஆகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, என் தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

என்னை பார்க்க வேண்டுமென அவர் விரும்பியதால், என் அப்பா என்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்து பெரியவர்களின் அனுமதியோடு என்னை அழைத்துச் சென்றார். நானும் அப்பாவும் பேருந்தில் சென்றோம். போகும் வழியில் சாலையின் நடுவில் கரும்பு லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்ததால், பேருந்து செல்ல வழி இல்லாமல் அனைத்து வாகனங்களும் வரிசையாக நின்று விட்டிருந்தன. 





என் அப்பாவிற்கு மிகுந்த வேதனையாகிவிட்டது. ஏனெனில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அம்மழையில் நனைய விட்டு நிறைமாத கர்ப்பிணி பெண்ணை அழைத்து வந்து இப்படி கஷ்டப்படுத்துகிறோமே என்று அவர் மிகவும் கவலைப்பட்டார். வழியில் சாப்பிட கூட எந்த உணவும் கிடைக்கவில்லையே என அப்பா மிகுந்த வேதனை அடைந்தார். எனக்கு எந்த சிரமமும் தெரியவில்லை. காரணம் என் மனம் முழுவதும் என் தாத்தாவின் நினைவு மட்டும் தான்.

கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தொலைவு மழையில் நனைந்தபடி நடந்து சென்ற பின் தான் ஒரு வாகனம் கிடைத்தது. அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டு மருத்துவமனையை அடைந்தோம். தாத்தாவை பார்த்த போது, என் கண்களில் வந்த கண்ணீருக்கு என்னால் அணை போட முடியவில்லை. என்னை அழவேண்டாம் என, என் தாத்தா கண்களால் சைகை செய்தது இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அதன் பின் அவர் குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டார்.

எனக்கு சுகப்பிரசவம் ஆகி, பெண் குழந்தையுடன் சென்று என் தாத்தாவை பார்த்துவிட்டு வந்தேன். இன்றைக்கும் பேருந்தில் அந்த வழியாக செல்லும் போதெல்லாம், அன்று, நான் நடந்த பாதை என் கண் முன் நிழலாடும். இப்பொழுது கூட மழை வந்தாலே, எனக்கு அந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும்.

(கதாசிரியர் ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்