ஏன் கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போறாங்க.. சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக் கதை!

Su.tha Arivalagan
May 12, 2026,11:08 AM IST

சென்னை: சட்டசபையில் இன்று புதிய சபாநாயகரை அவை முன்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையைப் பிடித்து அழைத்துச் சென்றது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான குட்டிக் கதையை முதல்வர் சி. ஜோசப் விஜய் கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.


விஜய் என்றாலே குட்டிக் கதையும் பின்னாடியே வரும். அவரது அரசியல் கூட்டங்கள், திரைப்படக் கூட்டங்களில் குட்டிக் கதைகள் பிரபலமானவை. சட்டசபையிலும் அந்த வழக்கத்தை அவர் தொடர்ந்துள்ளார்.


சபாநாயகரை ஆளுங்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அழைத்துச் செல்வது தொடர்பான சுவாரஸ்யமான பின்னணிக் கதைதான் அது. அந்தக் கதையின் உண்மையான முழு விவரத்தையும் இப்போது பார்ப்போமா...


இங்கிலாந்து நாடாளுமன்றத்தில்தான் இந்த மரபு தொடங்ங்கியது. அங்குள்ள House of Commons அதாவது நாடாளுமன்ற அவையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை ஆளுங்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் கையைப் பிடித்து இழுத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைக்கும் ஒரு விசித்திரமான மற்றும் சுவாரசியமான மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது.




பழங்காலத்தில் (சுமார் 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டுகளில்), சபாநாயகர் பதவி என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்பட்டது. சபாநாயகரின் முக்கிய வேலை, நாடாளுமன்றத்தின் கருத்துக்களை (பெரும்பாலும் அரசருக்குப் பிடிக்காத செய்திகளே அதிகம் இருக்கும்) மன்னரிடம் கொண்டு சேர்ப்பதாகும்.


மன்னருக்கு நாடாளுமன்றத்தின் முடிவு பிடிக்கவில்லை என்றால், அந்தச் செய்தியைக் கொண்டு வந்த சபாநாயகரின் தலை உருளும்.  பிரிட்டிஷ் வரலாற்றில், 1394 முதல் 1535 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் ஏழு சபாநாயகர்கள் கொல்லப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர்.


இதனால், சபாநாயகர் பதவியில் அமர்ந்தால் உயிர் போகக்கூடும் என்ற பயத்தால், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சபாநாயகராகப் பணியாற்றத் தயங்கினர். அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் தப்பிக்கக்கூட முயற்சி செய்தனர்.


எனவே, தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று மறுப்பதும், மற்ற உறுப்பினர்கள் அவரைத் வலுக்கட்டாயமாக தள்ளிக்கொண்டு அல்லது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் இருக்கையில் அமர வைப்பதும் வழக்கமானது. இதுதான் பின்னர் மரபாக மாறிப் போனது.


தற்போது இங்கிலாந்து மன்னராட்சி என்பது ஜனநாயகத்திற்கு உட்பட்டது என்றாலும் கூட, சபாநாயகருக்கு எந்த உயிராபத்தும் இல்லை. இருப்பினும், அந்தப் பழைய வரலாற்றை நினைவுகூரும் வகையில் இன்றும் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும்போது, அவர் தன் இருக்கைக்குச் செல்லத் தயங்குவது போலவும், பின்வாங்குவது போலவும் நடிப்பார். அப்போது ஆளுங்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அமர வைப்பார்கள்.


இந்த மரபு இந்தியாவிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் இந்த மரபானது, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் சபாநாயகர் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு காலத்தில் உயிர்ப்பயம் காரணமாக வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற நிலை மாறி இன்று ஜனநாயக மாண்பின் மரபாக இது மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்தக் கதையைத்தான் இன்று சட்டசபையில் கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் முதல்வர் சி ஜோசப் விஜய்.