டாஸ்மாக் கடைகள் மீது கை வைத்த முதல்வர் விஜய்.. முதல் கட்டமாக 717 கடைகள் குளோஸ்!
சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக மதுக் கடைகளை மூடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டின் மிக மிக மோசமான ஒரு பிரச்சினையாக இருப்பது இந்த மதுக் கடைகள்தான். மதுக் கடைகள் மிகப் பெரிய அளவுக்கு தமிவ்நாடு முழுவதும் பரவிப் பெருகி புற்றுநோயாக மாறி நிற்கின்றன. ரொம்பச் சிரமம் இல்லாமல் கடைக்குப் போய் மது அருந்தி விட்டு வர முடியும் என்ற அளவுக்கு இந்தக் கடைகள் பெருகி விட்டன. இதனால் பெண்கள் படும் பாடு சொல்லி மாளாது.
வீடுகளுக்கு அருகாமையில், வழிபாட்டுத் தலங்கல், பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக் கடைகளால் மக்களும், பெண்களும், மாணவர்களும் மிகப் பெரிய அளிவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுதவிர அதிகாரப்பூர்வமற்ற வகையிலும் மது விற்பனை களை கட்டியுள்ளது.
இந்த நிலையில் மதுக் கடைகளை மூட வேண்டும், மது அற்ற தமிழ்நாடாக இது மாற வேண்டும் என்று தொடர்ந்து பாமக உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் கடந்த காலங்களில் எடுக்கப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் தற்போது அமைந்துள்ள தவெக ஆட்சியில் மதுக் கடைகள் மீது முதல் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.