தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Oct 31, 2025,05:17 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் திமுகவினர் பீகார் தொழிலாளர்களைத் துன்புறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியது, அவர் வகிக்கும் பதவிக்கு கண்ணியம் சேர்ப்பதாக அமையாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் திமுகவினரால் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


மாணிக்கம் தாகூர் கண்டனம்




இதேபோல காங்கிரஸ் எம்.பியான மாணிக்கம் தாகூரும் பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 

தமிழ்நாட்டில் அமைதியாக உழைத்து வரும் ஆயிரக்கணக்கான பீகார் சகோதரர்களுக்கு எதிராக வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் வகையில் மீண்டும் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.


இது RSS பயிற்சியில் உருவான வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு — இதுதான் அவரது அரசியல் DNA. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்த கண்டனத்துக்கு முழு ஆதரவு! இந்தியாவின் ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.


பீகார் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் பேசியது பேசு பொருளாகியுள்ளது. காங்கிரஸுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாகவே பாஜக இந்த விஷயத்தை கையில் எடுத்திருப்பதாக கருதப்படுகிறது. 


பிரதமர் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு




அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


திமுக-வின் ஊழல் மற்றும் போலித்தனம் அம்பலப்படுத்தப்படும் போதெல்லாம், அவர்கள் மக்களைப் பிரித்தாளும் பழக்கமான சூழ்ச்சியைக் கையாண்டு கவனத்தைத் திசைதிருப்புகிறார்கள். நகராட்சி நிர்வாகத் துறையில் ₹888 கோடி ஊழல் வெளிச்சத்துக்கு வந்த நேரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசியல் திசைதிருப்பல் மூலம் அந்த ஊழலில் இருந்து கவனத்தை திசைதிருப்ப உடனடியாகத் தலையிட்டுள்ளார்.


மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கூற்று—தமிழ்நாட்டில் உழைக்கும் பீகார் மக்கள் திமுக உறுப்பினர்களால் தொந்தரவு செய்யப்பட்டனர்—என்பது உண்மையே ஆகும். முன்னாள் மற்றும் தற்போது பதவியில் இருக்கும் திமுக அமைச்சர்களான  பொன்முடி,  டி.ஆர்.பி. ராஜா, மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான  தயாநிதி மாறன்,  ஆ. ராசா மற்றும் அவர்களின் கட்சிப் பிரமுகர்கள் பலர் பீகார் மக்களைப் பற்றி இழிவாகப் பேசியதையும், பெரும்பாலும் அவமதிப்பையும் பகைமையையும் தூண்டும் விதத்தில் பேசியதையும் தமிழ்நாட்டு மக்கள் கண்கூடாகக் கண்டுள்ளனர்.


உண்மையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட அதே காணொளியில், மாண்புமிகு பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டில் பீகார் மக்களிடம் திமுக உறுப்பினர்களின் தவறான நடத்தையைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடுவதைக் காணலாம்.


திமுக எப்படி தமிழகத்திற்கு அவமானச் சின்னமாக மாறிவிட்டதோ, அதேபோல, மாண்புமிகு பிரதமரின் திமுக பற்றிய கருத்துகளை தமிழ்நாட்டு மக்கள் மீதான தாக்குதலாக மு.க.ஸ்டாலின் அவர்கள் திரித்துக் காட்ட முயல்வது, முதலமைச்சர் அலுவலகத்திற்கே இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.


மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தப் பிரித்தாளும், திசைதிருப்பும், கவனச்சிதறல் செய்யும் பழங்காலத் அற்ப அரசியலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம் இது. தமிழக முதல்வரும் அவரது கட்சியின் பிரமுகர்களும் கடந்த காலங்களில் பீகார் மக்கள் மீது அவமதிப்பையும் பகைமையையும் தூண்ட முயன்ற முயற்சிகளின் தொகுப்பு இங்கே உள்ளது—மக்கள் முடிவு செய்யட்டும் என்று அவர் கூறியுள்ளார்.