தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பு

Meenakshi
Feb 09, 2026,12:28 PM IST

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.


தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (பிப்ரவரி 9, 2026) தொடங்கி வைத்தார்.


இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் சென்னை உட்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் சுமார் 1,29,689 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளைகளிலும் சத்தான உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




முன்னதாக, இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அங்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம்!


2025 நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29,455 பணியாளர்கள் பயன்பெறத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் காண்கிறது.


மீதமுள்ள,

* 24 மாநகராட்சிகளில் 48,768 பேர்,

* 145 நகராட்சிகளில் 29,556 பேர், 

* 479 பேரூராட்சிகளில் 21,910 பேர் என மொத்தம் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களது பணிவேளையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.


தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் திராவிட மாடல் அரசு. 


இன்னும் பல நலத்திட்டங்களைச்  செய்து தருவோம்! என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்! என்று தெரிவித்துள்ளார்.