பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

Feb 07, 2026,02:39 PM IST

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்றவை தொடர்பாக கூட்டணிக் கட்சிகள் கடும் நெருக்கடி தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் திமுக அமைதியாக இதை அணுகி வருகிறது.


திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே இந்த முறை கூடுதல் இடங்களைக் கேட்டு வருகின்றன என்றாலும் கூட நெருக்கடி அதிகமாக இருப்பது காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளிடமிருந்துதான் என்று செய்திகள் கூறுகின்றன.


தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த சில தேர்தல்களாக இருந்த இணக்கம், தற்போது தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்களால் சிறிய சலசலப்புகளைச் சந்தித்து வருகிறது.




திமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகள் சில புதிய மற்றும் கூடுதல் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. அதில் முக்கியமாக நிலவுவது ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் என்ற இரு பிரச்சினைகள்தான். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் மட்டுமே முன்வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கூடுதல் தொகுதிகளை அனைவருமே கேட்கிறார்கள்.


கடந்த 2021 தேர்தலைப் போலல்லாமல், இந்த முறை ஆட்சியில் பங்கு என்ற குரல் உரக்க எழுந்துள்ளது. காங்கிரஸ் தரப்பில் இதை பகிரங்கமாகவே எழுப்பி வருகின்றனர். இதை வைத்து திமுக, காங்கிரஸ் இடையே சமூக வலைதளங்களில் பெரும் மோதலும் மூண்டுள்ளது.  


திமுக ஆட்சிக்கு வருவதற்கு காங்கிரஸ் தயவு தேவை. அப்படி இருக்கும்போது இத்தனை காலமாக எங்களால் ஆட்சிக்கு வந்து விட்டீர்கல். இப்போது எங்களுக்கும் பங்கு கொடுப்பதில் என்ன தயக்கம் என்று காங்கிரஸ் தரப்பு கேட்கிறதாம்.


ஆனால் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்களது கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாம். மறைந்த கலைஞர் உயிருடன் இருந்தபோது, பாமக தயவில்தான் ஒரு முறை திமுக ஆட்சியமைக்க நேர்ந்தது. அப்போது கூட கூட்டணி ஆட்சி குறித்து திமுக யோசிக்கவில்லை, பேசவும் இல்லை. அதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் பெருந்தன்மையாக கடந்து சென்றார். ராமதாஸ் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். அவரும் அதைச் செய்யவில்லை. அதேசமயம், ராமதாஸுக்குத் தர வேண்டிய மரியாதை, முக்கியத்துவத்தை கலைஞரும் உரிய முறையில் கொடுத்தார் என்பது திமுக தரப்பு சுட்டிக் காட்டுகிறதாம்.


கூடுதல் தொகுதிகள்




இதேபோல, 2024 மக்களவைத் தேர்தலின் வெற்றியால் உத்வேகம் அடைந்துள்ள கூட்டணிக் கட்சிகள், வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன. அனேகமாக அனைத்துக் கட்சிகளுமே கூடுதலாக எதிர்பார்க்கின்றன. இதில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிறார்களாம்.


மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் கடந்த காலத்தைப் போல திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், தங்கள் சொந்தச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளன.   கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக தீப்பெட்டி சின்னத்தில்தான் திருச்சியில் போட்டியிட்டு வென்றது என்பது நினைவிருக்கலாம்.


இப்படி நாலாபக்கமும் நெருக்கடி நிலவினாலும் திமுக அமைதியாக, நிதானமாக, பொறுமையாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாலும் கூட அடுத்தடுத்த ஆப்ஷன்களை திமுக முடிவு செய்து ரெடியாக இருக்கிறதாம். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால் தடுக்கப் போவதில்லை என்ற முடிவிலும் திமுக தலைமை உள்ளதாம்.


காங்கிரஸ் வெளியேறினால் பாமக (ராமதாாஸ்), தேமுதிக ஆகிய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட திமுக ரெடியாக இருக்கிறதாம். அதேபோல அவர்கள் கேட்கும் தொகுதிகளையும் கொடுத்து அவர்களை வைத்து காங்கிரஸ் இழப்பை சரிக்கட்டவும் திமுக தயாராக இருக்கிறதாம். காங்கிரஸ் வெளியேறினால், மீண்டும் திமுக கூட்டணியில் அவர்களை எதிர்காலத்தில் சேர்ப்பதில்லை என்ற முடிவிலும் திமுக இருப்பதாக சொல்கிறார்கள். தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைக்கவும் திமுக முயற்சிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


திமுக தனித்து 170 முதல் 180 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அப்போதுதான் மெஜாரிட்டிக்குத் தேவையான 118 இடங்களை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி ஆட்சி அமைக்க முடியும் என்று திமுக கணக்கிடுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, வாக்குகளைப் பிரிக்கும் என்பதால், கூட்டணிக் கட்சிகளை வெளியே விடாமல் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உண்டு. ஆனால், அதற்காக அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்க திமுக தயாராக இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்