Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!

Aug 18, 2026,04:58 PM IST

- சு.தா.அறிவழகன்


திருநெல்வேலி ஜங்ஷனில் நெல்லை எக்ஸ்பிரஸ் கிளம்பத் தயாராக இருந்தது. அந்த மாலை வேளையில், கூட்டம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. பயணிகள் தத்தமது பெட்டிகளைப் பார்த்து ஏறுவதில் மும்முரமாக இருந்தனர். அந்தக் கூட்டத்தில் எகிறிக் குதித்து அன்ரிசர்வ் பெட்டியில் அடித்துப் பிடித்து ஏறினான் சுந்தர். ஏறிய வேகத்தில் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்து "சுமதி! பத்திரமா பாத்துக்கோ... நான் டிடிஆர் கிட்ட பேசி ரிசர்வேஷன் பெட்டிக்கே வரப் பாக்குறேன். அடுத்த ஸ்டேஷனுக்குள் வரப் பார்க்குறேன்!" என்று மனைவியைப் பார்த்துக் குரல் கொடுத்தார். 


"நீங்க முதல்ல வேற எங்கேயும் இறங்காம இருந்தா சரி. பேசாம உக்காருங்க!" என சுமதி சலித்துக் கொண்டே தனது ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டியில் இரு குழந்தைகளையும் இழுக்காத குறையாக கூட்டிக் கொண்டு ஓடினாள். முதலில் சுந்தர் கூட வருவதாக இல்லை. கடைசி நேரத்தில் அவனும் வரவதற்கு வாய்ப்பு கிடைத்ததால், வேறு வழியில்லாம் ஓபன் டிக்கெட் வாங்கி அன் ரிசர்வ் பெட்டியில் பயணம்.


ஒரு ஐடி கம்பெனியில் கறாரான ஹெச்.ஆர் ஆக வேலை பார்க்கும் சுமதி, பயங்கர ஸ்டிரிக்ட். ஏதாவது என்றால் உண்டு இல்லை என்று செய்து விடுவாள். ஆனால் இதெல்லாம் ஆபீஸில் மட்டும்தான். வீட்டில் அப்படியே தலைகீழ். இவளை டென்ஷனாக்கி, தாறுமாறாக பதட்டத்திலேயே வைத்திருக்கத்தான் இரு வாண்டுகள் அவளுக்கு குழந்தைகளாக பிறந்துள்ளனர்.


ஆண் குழந்தையின் பெயர் அர்ஜூன். பெண் குழந்தையின் பெயர் ப்ரீத்தி. ரயில் கிளம்பிய அடுத்த பத்தாவது நிமிடமே பிபி எகிற ஆரம்பித்துவிட்டது சுமதிக்கு. இரண்டு வாண்டுகளையும் சமாளிக்க முடியாமல் ‘முட்டைக்கண்’ காட்டி மிரட்டிக் கொண்டிருந்தாள். கூடவே "டேய், டி" என்று கத்திக் கொண்டும் இருந்தாள்.




ஐந்து வயது அர்ஜூன் பெட்டிக்குள் சும்மா இருக்கவில்லை. "டிக்கெட்... டிக்கெட்... எல்லாரும் டிக்கெட் காட்டுங்க!" என்று தன் சட்டைப் பாக்கெட்டில் ஒரு பழைய நியூஸ் பேப்பரைச் செருகிக்கொண்டு, பெட்டியில் இருந்த அத்தனை பேரிடமும் டிடிஆர் போலச் செக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டான். அத்தோடு விடாமல், ஒரு ஐடி இளைஞனின் மடியில் ஏறி உட்கார்ந்து, அவனது லேப்டாப் கீபோர்டில் 'டக் டக்'கென அடித்துவிட்டு, "அங்கிள், உன் டிக்கெட் ஃபெயில்!" என்று கூறி விட்டு குடுகுடுவென ஓடினான். அந்தப் பெட்டி முழுவதும் இரு வாண்டுகளும் அடித்த லூட்டியால் ஒரே களேபரமாக இருந்தது.


ஐடி இளைஞனுக்கு என்ன டென்ஷனோ, அஸ்வின் செய்த சேட்டையால் கடுப்பானவன் அவனைக் கட்டுப்படுத்த காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்த சுமதியிடம் திரும்பி, புளூடூத்தை காதில் மாட்டியபடி, "மேடம், கொஞ்சம் மெதுவா பேசுறீங்களா? வொர்க் வித் வியூல இருக்கேன்..." என்றான் சலிப்பாக.


சுமதியும் விடவில்லை. சற்றும் சளைக்காமல், "தம்பி, நீங்க லேப்டாப்ல கோடிங் பண்றீங்க, நான் இங்க ரெண்டு அசுரக் குரங்குகளுக்கு ட்ரெய்னிங் கொடுத்துட்டு இருக்கேன். ரெண்டுமே பெரிய டாஸ்க் தான், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!" என அசால்ட்டாகச் சொல்லிவிட்டு, "டேய் எருமை மாடே.. இங்க வாடா" என்று சத்தம் போட்டபடி, மகனை இழுத்து வந்து உட்கார வைத்தாள்.


இன்னொரு பக்கம் மூன்று வயது அக்ஷயா, எதிர் சீட் பாட்டியின் கூடைக்குள் கைவிட்டு முறுக்கு பாக்கெட்டை உருவி, "அம்மா, எனக்கும் பாட்டிக்கும் ஸ்நாக்ஸ் டைம்!" எனச் சொல்லிக்கொண்டே முறுக்கைக் கடித்துக் குப்பையாக்கிக் கொண்டிருந்தாள். பாட்டி முகம் அப்படியே சுருங்கிப் போனது. என்ன பிள்ளை இது.. நான் சாப்பிட வச்சிருந்த முறுக்கை எடுத்துட்டுப் போயிட்டாளே என கடுப்பானார் பாட்டி.


பக்கத்து சீட்டில் இருந்த இன்னொரு பாட்டியோ, நீளமாக பெருமூச்சு விட்டபடி, "என்ன இருந்தாலும் நம்ம காலம் மாதிரி வருமா.. .. இந்தக்காலப் பொண்ணுங்களுக்குக் பொறுமையே இல்ல. எப்பப் பாத்தாலும் கத்திக்கிட்டே இருக்குதுங்க!" என்று மறைமுகமாக குத்திக் காட்டினார்.


"ஐயோ! இந்த ரயிலை யாராவது நடுவுல நிப்பாட்டுங்களேன், நான் இவனுங்களை கூட்டிட்டு நடந்து கூட ஊர் போய்ச் சேர்ந்துடுறேன்!" எனத் தலையில் அடித்துக்கொண்டாள் சுமதி. ஒரு போர்க்களத்தில் படு டென்ஷனாக இருக்கும் போர்ப்படைத் தளபதி போல இருந்தது சுமதியைப் பார்த்தபோது. கூடவே செல்லில் தனது கணவரை அழைத்து "என்ன ஜாலியா இருக்கீங்களா அங்க.. இங்க நான் நாய் பாடு படறேன்.. உங்களுக்கு என்ன" என்று அவரையும் கடித்து வைத்தாள்.


இப்படி களேபரமாக ஆரம்பித்தது அந்த ரயில் பயணம். கிளம்பி 2 மணி நேரம் வரை இந்த அமர்க்களம் நீடித்ததால் பெட்டியில் இருந்த யாருமே சரியாக தூங்க முடியவில்லை. படுக்க முடியவில்லை. காரணம் வாண்டுகள் ரயிலுக்குள் ரயில் விட்டு விளையாடியது மற்றும் சுமதியின் திடீர் திடீர் கத்தல்கள்.


சுமதி இறங்க வேண்டியது விருதாச்சலம். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் ரயில் சீறிப் பாய்ந்து ஓடத் தொடங்கியது. அமர்க்களம் சற்றுக் குறைந்து பிள்ளைகள் இருவரையும் அப்பர் பெர்த்தில் படுக்க வைத்து விட்டு மிடில் பெர்த்தில் படுத்துக் கொண்டாள் சுமதி. மெல்ல மெல்ல ரயிலில் அமைதி திரும்பியது.


பகல் முழுவதும் பெட்டியையே கதிகலங்க வைத்த அஸ்வின், அப்பர் பர்தில் கும்பகர்ணனின் வாரிசாகவே மாறிப்போயிருந்தான். மணி நள்ளிரவைத் தாண்டி 2 இருக்கும்.. ரயில் வேகம் பிடித்துப் போய்க் கொண்டிருந்தது. திடீரென பெட்டியில் சத்தம்.. "டேய் அர்ஜூன் எழுந்திரிடா.. அடியே அக்ஷயா எந்திரி.. நம்ம ஊர் வரப் போகுது.. நெக்ஸ்ட் ஸ்டாப்தான்.. எந்திரிங்க எந்திரிங்க" சுமதியின் குரலால் ரயிலில் மீண்டும் பரபரப்பு.. அயர்ந்த உறக்கத்தில் இருந்த பலரும் அடித்துப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தனர். சுமதியோ தான் இருந்த பகுதியில் லைட்டையெல்லாம் போட்டு  மீண்டும் ஒரு போர்க் காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தாள்.


சுமதி போட்ட சத்தத்தில் அக்ஷயா எழுந்திரித்து விட்டாள். ஆனால் அர்ஜூனோ அசையவே இல்லை. 


"அர்ஜூன்! டேய் தங்கம், எந்திரிடா... ஊரு வந்துருச்சுடா.. வாடா !" என்று அவனைத் தட்டித் தட்டிப் பார்த்தாள். ம்ஹூம் தம்பிப் பைய அசையலையே!


சுமதி தட்டிப் பார்த்தாள்; எழவில்லை. தண்ணியை எடுத்து மூஞ்சியில் தெளித்தாள்; லேசாக முனகிவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான் அர்ஜூன்.


சுமதியின் பதற்றத்தைப் பார்த்த அந்த ஐடி தம்பியும், பக்கத்து சீட் மாமாவும் தூக்க கலக்கத்திலேயே எழுந்தார்கள்.


"மேடம், இருங்க நாங்க எழுப்புறோம்" என்று அவர்களும் குரல் கொடுத்துப் பார்த்தனர். ஆனாலும் அர்ஜூன் சற்றும் சளைக்கவில்லை. அவன் பாட்டுக்குத் தூங்கிக் கொண்டிருந்தான்.


"தம்பி இதெல்லாம் சரிப்படாது.. அப்படியே அலேக்கா தூக்கி இறக்குங்க" என்று சொன்ன சுமதியைப் பார்த்து, திடுக்கிட்டான் ஐடி  இளைஞன். 


"என்ன மேடம் சொல்றீங்க. அலேக்கா தூக்க இது என்ன பெட்டியா" என்று பின்வாங்க.. "அட  என்னப்பா நீங்க.. இப்படித்தான் இவனை இறக்க முடியும்.. எனக்குத் தெரியாதா.. சும்மா யோசிக்காதீங்க.. அப்புறம் ஊர் வந்துரும். நான் இறங்க முடியாமப் போயிரும்.. ப்ளீப்பா, தூக்கு தூக்கு" என்று சுமதி விரட்ட, சற்றே குழம்பிப் போன அந்த ஐடி இளைஞன், பக்கத்தில் அதே பய பீதியில் நின்றிருந்த மாமா பக்கம் திரும்பி "ப்ளீஸ் ஹெல்ப் மீ" என்று பார்வையால் கூற, அவரும் இவனுமாக சேர்ந்து அர்ஜூனை அப்படியே பொத்துனாப்ல தூக்கி கீழே கொண்டு வந்து லேன்ட் செய்தனர். தம்பியைத் தூக்கியபோது, ஐடி இளைஞனின் மனதில், "நல்ல கனம் நல்ல கனம்" என்ற வடிவேலு வசனம் மனதுக்குள் வந்து போனது.!


இரண்டு பேரும் சேர்ந்து அப்பர் பர்தத்தில் இருந்து அர்ஜூனை அல்லேக்காகத் தூக்கி கீழே கொண்டுவந்து சீட்டில் உட்கார வைத்தார்கள். ஆனால் அர்ஜூனோ பலே வெள்ளையத்தேவா ரேஞ்சுக்கு, தலையை 'டப்'பென  பக்கத்து சீட் மாமி தோளில் சாய்த்து மறுபடியும் தூங்க ஆரம்பித்தான்.


இப்போது பெட்டியில் பாதி பேர் விழித்துவிட்டார்கள்!


"தம்பி! ஏய் அர்ஜூன்! எழும்புடா!" என ஐடி தம்பி அவன் கன்னத்தைத் தட்டினான்.


"தம்பி, பிஸ்கட் தர்றேன் எந்திரிடா!" என்றார் பாட்டி.


"பகல் பூரா பேயாட்டம் ஆடுனான், இப்போ பாருங்க சாக்கு மூட்டை மாதிரி கிடக்குறான். இவனை அன்ரிசர்வ்டுல வர்ற அவங்க அப்பன்கிட்டயே பார்சல் பண்ணி விட்ருக்கணும்!" என சுமதி புலம்ப, கலவரத்திலும் ஒட்டுமொத்த பெட்டியும் சிரிப்பை அடக்கப் பாடுபட்டது.


ஒரு வழியாக விருத்தாசலம் ஸ்டேஷனில் இரண்டே முக்கால் மணிக்கு ரயில் வந்து நின்றது. அன்ரிசர்வ் பெட்டியில் இருந்து ஓடிவந்த சுந்தர், சுமதி இருந்த பெட்டியை நோக்கி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தான். அவனைப் பார்த்த சுமதி கண்களில் கோபம் கொப்பளிக்க " வாங்க சார் வாங்க.. பாத்து பதறாம வாங்க" என்று சவுண்டு விட "என்னடி ஆச்சு?" என மூச்சிரைக்கக் கேட்டான் சுந்தர்.




"உங்க மகனைத் தூக்குங்க முதல்ல!"


சுந்தர் யோசிக்கவே இல்லை; அர்ஜூனைத் தூக்கித் தோளில் சாக்கைப் போடுவது போல் தூக்கிக்கொண்டு பிளாட்ஃபார்மில் நடக்க ஆரம்பித்தான். சுமதியும் அக்ஷயாவைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே ஓடினாள்.


ரயில் மெல்ல நகரத் தொடங்கியது.


பெட்டியில் இருந்த அத்தனை பேரும் ஜன்னல் வழியா அந்த குடும்பத்தையே பார்த்தார்கள். "அப்பாடாஆஆஆ! புயல் கரையை கடந்துருச்சு... நிம்மதியா போச்சு போங்க!" என ஒட்டுமொத்தப் பெட்டியும் பெருமூச்சு விட்டது.


ஐடி தம்பி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான். பாட்டி கம்ப்ளீட்டாக லைட்டை ஆஃப் செய்தார். ரயில் இருளைக் கிழித்துக்கொண்டு சென்னையை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்