தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

Oct 03, 2026,02:40 PM IST

சென்னை : தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் பெரும் அரசியலரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.


இதற்குக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ள தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், மு.க.ஸ்டாலினின் கருத்துக்களுக்குத் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.   


தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து, அண்மையில் நடைபெற்ற திமுக இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருவக் கேலி (Body Shaming) செய்து, மிக அநாகரிகமான முறையில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 



இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள முதல்வர் விஜய் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தியான திமுகவிற்கு, தமிழ்நாட்டுப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து உருவக் கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புளகாங்கிதம் அடைந்துள்ளார். ஆபாச நதியையும், வன்ம நதியையும் உருவாக்கியதே தாம் தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.


பெண் வேட்பாளரின் தோற்றத்தையும் உருவத்தையும் சுட்டிக்காட்டி பொது மேடையில் கேலி செய்திருப்பது அரசியல் பண்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது எனத் தவெக தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் கொள்கை ரீதியாகவும் மக்கள் நலன் சார்ந்தும் விவாதிக்காமல், தனிநபர் தாக்குதலிலும் உருவக் கேலியிலும் திமுக தலைமை ஈடுபடுவது அவர்களின் தோல்விப் பயத்தையே காட்டுகிறது என்று தவெக நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர்.   


இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னணி தலைவர்களுக்கிடையே நிலவும் இந்த நேரடி வார்த்தை மோதல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்