ஆல்தோட்ட பூபதி நானடா

Nov 17, 2026,12:54 PM IST

- ஜெயபாரதி மதிவாணன்


பக்கத்து வீட்டு ராஜி, எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சுவையான சம்பவம் இது. ராஜி மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டாள். அவளுடைய அம்மா, ராஜிக்கு முருகன் வேடத்தை மிக அழகாக அணிவித்து, அதற்கேற்ற முருகன் பாடல் ஒன்றையும், “யாமிருக்க பயமேன்?” என்ற வாசகத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். 


ராஜியும் நன்றாகப் பயிற்சி செய்து மனப்பாடம் செய்துகொண்டாள். ஆனால், மேடையில் ஏறியதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். “பாட்டு பாடவா?” என்று மேடையிலிருந்தே அம்மாவிடம் கேட்டாள். அம்மாவும் சரி என்று தலையசைத்தார்கள். உடனே, “ஆல்தோட்ட பூபதி நானடா... அந்த அமரர் தோட்ட பூபதியும் நானடா...” என்று உற்சாகமாகப் பாடிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டாள். 


அம்மா சொல்லிக்கொடுத்த முருகன் பாடல் மறந்துபோனதால், தனக்குத் தெரிந்த இந்தப் பாடலைப் பாடியிருக்கிறாள். இதைக் கேட்ட முருகனே திடுக்கிட்டிருப்பார்! “நான் எப்போது இந்தப் பாடலைப் பாடினேன்?” என்று!


ஒருநாள் ஜெயந்தி அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தேன். நான் எழுதிய கட்டுரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ராஜி முருகன் வேடமிட்டு, “ஆல்தோட்ட பூபதி” பாடலைப் பாடிய சம்பவத்தையும் எழுதியிருந்தேன். அதைப் பார்த்ததும் அக்கா சிரித்துக்கொண்டே, “கிருபானந்த வாரியார் இப்போது இருந்திருந்தால், ராஜி பாடியது சரிதான் என்று சொல்லியிருப்பார்!” என்றார்கள். 




“அது எப்படி அக்கா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். உடனே அக்கா, கிருபானந்த வாரியார் பேசும் பாணியில் விளக்கத் தொடங்கினார்கள். “முருகா! முருகா! அந்தச் சிறுமி ராஜி ‘ஆல்தோட்ட பூபதி’ என்று பாடியதைக் கேட்டு சிரித்தீர்களா? அவள் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? அந்தப் பாடலின் பொருளைப் பாருங்கள். ‘ஆல்’ என்றால் ஆலமரம்; ‘தோட்ட’ என்றால் தோட்டங்கள்; ‘பூ’ என்றால் பூலோகம்; ‘பதி’ என்றால் தலைவன். ஆலமரங்களும், தோட்டங்களும் நிறைந்த இந்தப் பூலோகத்தின் தலைவன் முருகன் என்பதைத்தானே அவள் பாடியிருக்கிறாள்!”


அக்கா தொடர்ந்து, “அடுத்து, ‘அந்த அமரர் தோட்ட பூபதியும் நானடா’ என்று பாடியிருக்கிறாள். அமரர்கள் என்றால் தேவர்கள். அழகிய பூந்தோட்டங்கள் நிறைந்த தேவலோகத்திற்கும் தலைவன் முருகன்தானே! ஆகவே, பூலோகத்திற்கும் தேவலோகத்திற்கும் தலைவனான முருகனைப் பற்றித்தான் அந்தக் குழந்தை பாடியிருக்கிறாள். இதில் என்ன தவறு இருக்கிறது? அவளுடைய ஞானத்தைப் பாராட்ட வேண்டும்!” என்று சொல்லி, “முருகா... முருகா...” என்று முடித்தார்கள். 


அக்கா சொன்ன விளக்கத்தைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. உண்மையிலேயே கிருபானந்த வாரியார் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நகைச்சுவையுடன் விளக்கியிருப்பாரோ என்னவோ! எப்படியோ, ராஜி பாடியது முருகன் பாடல்தான் என்றாகிவிட்டது!


(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர்.  கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்