- அ.தாமஸ்
"சாதியம் கடந்த சமத்துவமும், மானுடம் மீட்கும் மனித நேயமுமே" இன்றைய வாழ்வியல் தத்துவமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இச்சமூகம் நிற்கிறது. மனிதனை உயர்த்துவது செல்வமல்ல; சக மனிதனின் கண்ணீரைத் துடைக்கும் கருணையும், கைகோர்த்து முன்னேறும் ஒற்றுமையுமே நமது முதன்மை குறிக்கோளாக மாறும்பொழுது இச்சமூகம் மாற்றம் நிரம்பிய பலரும் விரும்பிய சமூகமாக மாறும்.
ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் உயர்ந்த கோபுரங்களால் அளவிட முடியாது; சமூகத்தின் விளிம்பில் நிற்பவர்களின் முகத்தில் மலரும் புன்னகையால்தான் அளவிட முடியும். எனவே, விளிம்பு நிலை மக்களுக்கான ஒற்றுமையையும் கருணையையும் மனிதநேயத்தின் இரு விழிகளாகக் காத்து அதை மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை உணர்வோம் அதன் வழி நகர்வோம்.
விளிம்பு நிலை மக்கள் – சமூகத்தின் மனசாட்சி:
வறுமை, கல்வியின்மை, சமூகப் பாகுபாடு, மாற்றுத்திறன், ஆதரவின்மை, வாழ்வாதாரக் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் வாழ்க்கை ஓட்டத்தில் தங்களை முன்னிறுத்த முனைப்போடு போராடுபவர்களே விளிம்பு நிலை மக்கள். அவர்கள் இச்சமூகத்தின் சுமையல்ல; சமூகம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு. அவர்களின் வலி புரியாது, நாம் எத்தகைய வளர்ச்சியை எட்டினாலும் அது பயனற்ற பதரைப் போன்றது தான்.அது காற்றில்லாத வரை நிறைவாய்த் தெரியும், காற்றடித்தால் குறைவாய்த் தெரியும். எனவே அவர்களின் வாழ்வியல் தேவைகளை உணர்ந்து அதை விரைந்து செயல்படுத்தி அவர்களையும் வாழ்வின் உயரிய உறவுகளாக உயர்த்துவோம். அவர்களும் இவ்வுலகின் அவசியம் என்பதை உணர்த்துவோம்.
ஒற்றுமை – உறவை இணைக்கும் உயிர்க்கயிறு:

ஒற்றுமை என்பது ஒன்றாக நிற்பது மட்டுமல்ல, மாறாக அவர்கள் உணர்வுகளில் ஒன்றி உறவாக நிலைப்பதில் மட்டுமே சிறக்கிறது. ஒருவரின் வேதனையை மற்றொருவர் உணர்ந்து உயர்ந்திட கரம் கொடுத்து, சுமக்கையில் தோள் கொடுக்கையில் இச்சமூகத்தின் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகள் கரைகிறது. எனவே பாகுபாடுகள் பின்னோக்கியும், மனித நேயம் முன்னோக்கியும் பயணிக்கத் துவங்குகிறது.
இதனையே வள்ளுவர், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சிந்தனை வழி மனிதர்களிடையே பிறப்பால் பாகுபாடு இல்லை. அனைவரும் சமமான மரியாதைக்குரியவர்களே என்பதை ஒவ்வொரு நிலையிலும் உணர்த்துகிறார். எனவே நாமும் மனிதனை மனிதனாக மதிப்போம் அவர்களின் உணர்வுகளை நமது உணர்வாகவே ஒவ்வொரு நாளும் நினைப்போம்.
கருணை – மனிதத்தின் உயிர்மூச்சு:
கருணை என்பது பரிதாபம் அல்ல; பிறரின் துயரத்தைப் போக்க முனையும் பண்பு. பசியோடு இருப்பவனுக்கு உணவு அளிப்பதும், கல்வி இழந்த குழந்தைக்கு கல்வி அளிப்பதும், மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பளிப்பதும், ஆதரவற்ற முதியவருக்கு ஆறுதலாக இருப்பதும் கருணையின் உயர்ந்த வடிவங்களாகும்.
கருணை கொண்ட இதயம் கைகளை வெறுமனே நீட்டாது; வாழ்க்கையை உயர்த்தும் வாய்ப்புகளையும் உருவாக்கும். ஒருவரின் வாழ்வில் நம்பிக்கையை விதைப்பதே கருணையின் உன்னத நோக்கமாகும்.
இன்றைய காலத்தின் தேவை
அறிவியலும் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்வது என்றாலும் கூட மனிதநேயம் சுருங்காமல் காப்பதும் நமது கடமையே. சமூக வலைதளங்களில் இரக்கத்தைப் பகிர்வதைவிட, சமூகத்தின் கருணை சார்ந்த தின நிகழ்வுகளைப் பகிர்வதே உயர்ந்த செயல். பொருளாதார உதவியைவிட, சமமான மரியாதையும் சம வாய்ப்பும் வழங்கும் மனப்பான்மையே விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மாற்றும். எனவே கருவுறாமலேயே கருவுற்றதால் தாயான அன்னை தெரசாவின் வழியிலே நாமும் கருணையால் கருத்தரிக்காமலே தாயாகும் நிலை ஏற்போம்.
ஒரு விளக்கு தன்னைச் சுற்றிய இருளை மட்டுமே அகற்றும்; ஆனால் கருணை கொண்ட மனிதன் பலரது வாழ்க்கையின் அறியாமை இருளை அகற்றுவதோடு அவனுக்குத் தேவையான வாழ்வியல் ஒளியையும் ஏற்றுகிறார். கருணை இதயங்களை இணைக்கிறது. கருணையும், மனித நேயமும் ஒன்றிணையும் பொழுது மட்டுமே சமத்துவம் வளர்ந்து மனித நேயத்தை மீட்டெடுக்கிறது.
மனித நேயம் என்பது சமூகத்தின் உயர் நிலையில் இருப்பவர்களையும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சிதைபவர்களையும் ஒரே இருக்கையில் அமர்ந்து உணவருந்தச் செய்வதும், தங்களின் உணர்வுகளை உள்ளன்போடு உணர்த்தச் செய்வதுமே ஆகும். எனவே எதிர்நோக்குமிகு உயரிய உன்னதச் சிந்தனையை உருவாக்குவது அரசின் கடமை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்; வாழ்வில் உயர்வடைவோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
பாஜக தேசிய நிர்வாகிகள் மாற்றம்: 65 பேருக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு
சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!
விளிம்பு நிலை மக்களுக்கான ஒற்றுமையும், கருணையும்!
திருமண நாள்!
தேனும் மருந்தாகும் தித்திக்கும் விருந்தாகும்!
அன்னையாய் மாறுகிறாய்.. ஆறுதலாய்ப் பேசுகிறாய்!
அன்னையின் மருத்துவம்
சிவகணங்களே காணாத ஈசனின் திருத்தோற்றம்.. அன்னை தடாதகை - 11
கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்
{{comments.comment}}