எனது பார்வையில் சுதந்திரம்

Aug 15, 2026,02:21 PM IST

- அ. தாமஸ்


"இதுதான் வாழ்க்கை; இதைக் கடந்தா வாழ்க்கை?" என சிறிய வட்டத்தில் சுவாசித்த காற்றே சுதந்திரம்! மன்னர்கள் கையில் மகுடமாகவோ, மத்தளமாகவோ இருந்த நிலையில் மகிழ்ந்ததே சுதந்திரம்!  கிடைக்காததைத் தேடியும், கிடைத்ததைத் தொலைத்தும் மகிழ்ந்த நிலையே சுதந்திரம்!  நீர் உயர, உயர்ந்த மலர் போல், கோன் உயர்வில் மக்களின் உயர்வை உணர்ந்த நிலையே சுதந்திரம்! 


இருக்கும் வளத்தை எடுத்துப் பகிர்ந்து, தினம் பகிர்வில் மகிழும் மனமே சுதந்திரம்! வேண்டும் வளத்தை வரமாய்க் கொடுத்து, கொடுத்தலில் இன்பம் பெற்ற நிலையே சுதந்திரம்! அந்நியர் கையில் அகப்படும் வரை அறியாத உணர்வாய் இருந்ததே சுதந்திரம்!  நம்பிய மக்களை நடுக்காட்டில் விட்ட பித்தர்களால் தேவைப்பட்டதே சுதந்திரம்! 


சமயக் குருக்களால் அடிமைப்பட்டும் அறியவில்லை அன்று சுதந்திரம்!  அந்நியரால் உதைபட்டு, நம்மவனால் நசுக்கப்படும் போதே தேவைப்பட்டது சுதந்திரம்!  மக்களின் அறியாமை களையாமல், உணர்த்தவே முடியவில்லை சுதந்திரத்தை!  புரட்சிப் பேச்சாலும், எழுச்சிப் பாடலாலும் மெல்ல மெல்ல உணர்த்தப்பட்டதுதான் சுதந்திரம்!  




கொஞ்சமாய் உணர்ந்தவர்களை மெல்லமாய் இணைத்து, போராட வைத்ததே சுதந்திரம்!

சிறுதுளியாய் இணைந்து, பெருந்தனலாய் தகித்து, அந்நியரின் ஆதிக்கத்தை அழிக்க நம் கரங்களில் கிடைத்ததே சுதந்திரம்! 

ஆனந்தக் கூத்தாடினோம்; இருந்த ஒன்றை இழந்துவிட்டு, கிடைக்காத ஒன்று கிடைத்ததென்று!

மன்னனைத் துறந்தும், அந்நியனை அகற்றியும் நம்மை நாமே ஆண்டிடத்துணிந்தோம்!


ஏற்றத்தாழ்வை அறவே களைந்து, சாதிய நச்சைத் தூரமாய் எறிந்து, பாகுபாடில்லாப் பயணம் தொடரவே, சட்டம் நம்மை ஆளும் வழிவகை புனைந்தோம்!  எண்ணமும் திட்டமும் எல்லாம் சரிதான்; நம்மை ஆள வகுத்த சட்டத்தைச் சிலர் மட்டும் ஆளும் நிலையே அவலம்!  சுதந்திரம் என்பதைப் பெற்றும் கூட வசதியைப் பொறுத்தே வாய்க்கப் பெற்றது!  உறவும் உணர்வும் இழந்து, வலியும் வேதனையும் இணைந்து, உறக்கம் என்பதே மறந்து எல்லையைக் காக்கும்  வீரனையும் கூட எள்ளி நகையாடுகிறது அதிகாரக் கூட்டம்! 


போதையால் பாதை மாறி, சுயம் மறந்த சுயநலவாதிகளையே உருவாக்கியிருக்கிறது அதிகார வர்க்கம்! நம்மை ஆள யார் என்று யாரோ ஒருவன் தீர்மானிக்க, ஏதோ போல வாழ்கின்றோம்! எவனோ ஒருவன் கொடுப்பதைத்தான் உரிமை என்றே ஏற்கின்றோம். உண்ணும் உணவையும், உடுத்தும் உடையையும் கூட எவனோ ஒருவன் உருவாக்கி, அவனையே நம்முள் சேர்க்கின்றான். 


அவன் கொடுப்பவை அனைத்தையும் மறுக்கும் வாய்ப்பையும் மறுக்கின்றான். அவன் மறுப்பதைக் கூட மறந்துவிட்டே நாமும் அவனிடம் மயங்கி நிற்கின்றோம்.  இந்நிலையைக் கடந்து, நம் நிலையை உணர்ந்து நம்மை நாமே ஆள நினைந்திடுவோம்;  ஆள்பவர் யாவரும் சட்டத்தை ஆளும் நிலை கடந்து, சட்டமே ஆளும் நிலை வந்தால், சமத்துவம் இங்கே நிலைத்துவிடும், சாதிகள் யாவும் களைந்துவிடும், ஒற்றுமை நம்மில் நிலைத்துவிடும், மகிழ்ச்சி ஒன்றையே புகுத்திவிடும்; மானுட சமூகம் உயர்ந்துவிடும்.


எனவேதான் ஒவ்வொரு நாளும் வேண்டுகிறேன்: சட்டத்தை ஆளும் நிலை உடைத்து, சட்டத்தால் ஆளும் நிலையை ஏற்க! எந்நிலையில் அந்நிலை தொடர்கிறதோ, அன்றே கிடைத்திடும் சுதந்திரம்!


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்