வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி: சிலரை போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல இது. சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு இது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கள்ளக்குறிச்சி டூ திருவண்ணாமலை சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. சிலரை போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல இது. சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு இது. ஜிஎஸ்டி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல், ஸ்டார்ட் அப் என அனைத்திலும் தமிழ்நாடு முதலிடம்.
திராவிட மாடல் அரசு என்பது சாதனை திட்டங்களின் அரசு. மக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய திட்டங்களை நிறைவேற்றி, மக்களை நேரடியாக சந்திக்கக் கூடிய திறன் கொண்டது திமுக அரசு. ஒன்றிய அரசு தரவரிசைகள் எல்லாவற்றிலும் நம்பர் 1 ரேங்க் நம்ம தான். நெஞ்சை நிமிர்த்தி, காலரை உயர்த்தி தமிழ்நாடு முன்னேறுகிறது. இதில் 5 சதவீதமாவது அதிமுகவின் ஆட்சியில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் அவர்கள் சொல்லட்டும்.
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ், ரம்ஜான் நாட்களில் கேக், பிரியாணி எங்கே என்று மக்கள் உரிமையுடன் கேட்கின்றனர். மதுரை சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடியவர்களுக்கு இஸ்லாமியர்கள் ரோஸ் மில்க் கொடுக்கிறார்கள். தை முதல் நாளன்று தேவலாயத்தில் பொங்கல் வைத்து படைக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள். எம்மதமும் சம்மதம் என்ற தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் தான் பாஜக கண்களை உறுத்துகிறது.
எத்தனை அடிமைகளை சேர்த்துக்கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழக்கூடிய தமிநாட்டு மக்களிடம் மதவெறியைத் தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை, திராவிட மாடல் அரசு இருக்கும் வரை உங்கள் மதவெறி ஆட்டத்திற்கு இங்கு இடம் கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுக்களால் விரட்டி அடிப்பாா்கள். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா. பொருளாதார வளர்ச்சி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.
பத்திரிகையாளர்கள் பெயர்கள் கூட வாக்காளர் பட்டியலில் இல்லை. வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.