திமுக கூட்டணியில் தேமுதிக.. பெருமகிழ்ச்சி அளிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Su.tha Arivalagan
Feb 19, 2026,11:27 AM IST

சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


கலைஞர் கருணாநிதி காலத்திலேயே திமுக கூட்டணிக்கு வந்திருக்க வேண்டிய கட்சி தேமுதிக. ஆனால் அப்போது அது திமுகவுக்கு வராமல் அதிமுக பக்கம் போய் விட்டது. இந்த நிலையில் இப்போது திமுக கூட்டணிக்கு முதல் முறையாக தேமுதிக வந்து சேர்ந்துள்ளது.


இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!




சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.


கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! 


திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.