எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!
பெங்களூரு : தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு உலக நன்மைக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டார் என சொல்லப்படுகிறது.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய்க்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், முதன்மை அர்ச்சகர்கள் சார்பிலும் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அர்ச்சகர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலின் உள்ளே அழைத்துச் சென்றனர். அம்மன் சன்னதியில் அமர்ந்து முதல்வர் விஜய் மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவருக்கு மூகாம்பிகை அம்மனின் சிறப்புப் பிரசாதங்கள், குங்குமம் மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்டு, அர்ச்சகர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது. இந்த ஆன்மீக வழிபாட்டின் போது முதல்வருடன் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருந்தனர்.
கொல்லூர் மூகாம்பிகை கோவில் மரபுப்படி, ஆண்கள் கோவிலுக்குள் மேல் சட்டை அணிந்து செல்லக் கூடாது. இதன் காரணமாக முதல்வர் விஜய்யும் தனது காரில் இருந்து இறங்கும் போதே சிவப்பு நிற சால்வை போர்த்திய படி கோவிலுக்குள் சென்றார். கொட்டும் மழையில் அவர் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி கொல்லூர் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்றிருந்த முதல்வர், தனது 3 நாள் டில்லி பயணத்தைக் கொண்டு இன்று காலை டில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார். பிறகு கர்நாடக மாநிலம் மங்களூருவிற்கு சென்ற விஜய், கார் மூலமாக கொல்லூர் சென்றார். தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் ஆன்மீக பயணம் இது என்பதால், திடீரின் முதல்வர் கொல்லூர் சென்று வழிபடுவதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் சிறப்பு:
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சௌபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயில், இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும்.
ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கோயில், கலைமகள் (சரஸ்வதி), அலைமகள் (லட்சுமி), மலைமகள் (பார்வதி) ஆகிய முப்பெரும் தேவிகளின் வடிவமாக மூகாம்பிகை அம்மன் விளங்கும் தலம் என்பதால், தமிழகத்தில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
குறிப்பாக கல்வி, கலைகளில் சிறந்து விளங்கவும், புதிய காரியங்களைத் தொடங்கவும் இத்தலம் மிகவும் விசேஷமானது என்று நம்பப்படுகிறது.
முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இங்கு வந்து சென்றுள்ளனர். மறைந்த எம்ஜிஆர் தங்க வாள் ஒன்றை இக்கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். இசைஞானி இளையராஜாவுக்கும் மிக மிகப் பிடித்தமான கோவில் தாய் மூகாம்பிகை கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.