பெங்களூரு: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் ஜூன் 12-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிறகு கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடும் இரண்டாவது தமிழக முதல்வர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பயணத்திற்குப் பின் ஆன்மீகப் பயணம்:
நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்குள்ள தனது முக்கிய அரசியல் சந்திப்புகளை ஜூன் 12-ஆம் தேதிக்குள் நிறைவு செய்கிறார். அதனைத் தொடர்ந்து, டெல்லியிலிருந்து அவர் நேரடியாகக் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்தடைவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை பகல் 12.30 மணி யளவில் மங்களூரு வரும் விஜய், பிறகு சாலை மார்க்கமாக சென்று பகல் 3 மணியளவில் கொல்லூர் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆர்-இன் பாரம்பரியப் பாதை:
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தராகத் திகழ்ந்தார். பல முக்கிய அரசியல் முடிவுகளுக்கு முன்பும், பின்பும் அவர் இக்கோயிலுக்கு நேரில் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1984ம் ஆண்டு உயர் சிகிச்சைக்காக எம்ஜிஆர் அமெரிக்கா சென்றிருந்த போது அவருக்காக பலரும் கொல்லூர் சென்று வேண்டிக் கொண்டார்கள். சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய எம்ஜிஆர், தான் நலமுடன் திரும்பி வந்ததற்கும், அந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் மூகாம்பிகை அம்மனே காரணம் என கருதியதால், அதற்கு நன்றிக்கடனாக கொல்லூர் மூகாம்பிகைக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக செலுத்தினார். இந்த வாள் இன்றும் அம்மனின் கருவறையில் பாதுகாக்கப்பட்டு, முக்கிய விசேஷங்களின் போது மட்டும் அம்மனுக்கு அலங்காரமாக சாத்தப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

தமிழக முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, கர்நாடக மாநில காவல் துறை மற்றும் உடுப்பி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொல்லூர் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர் தரிசனம் செய்யும் நேரங்களில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், அதே நேரத்தில் முதல்வருக்கான உரியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் விரிவான பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் முதல்வருக்குச் சிறப்புப் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கவும், அம்மனுக்குச் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் சண்டி ஹோமம் போன்ற வழிபாடுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு அண்டை மாநிலத்திற்கு விஜய் மேற்கொள்ளும் முதல் ஆன்மீகப் பயணம் இது என்பதால், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடரும் விஜய்யின் ஆன்மீக பயணம் :
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் திருச்செந்தூர் சென்று வேல் சாத்தி முருகனை வழிபட்ட விஜய், மறுநாள் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தற்போது முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக கொல்லூர் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். ஏற்கனவே தேர்தல் பிரச்சார சமயத்தில் திருச்சியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற விஜய் முழங்காலில் நடந்து சென்று வேண்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கொல்லூர் செல்ல காரணம் :
கொல்லூர் மூகாம்பிகை கோவில், அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்று. அம்பிகையின் காதுகள் விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. அதனால் இங்கு பக்தர்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அதை உடனடியாக அம்பாள் காது கொடுத்து கேட்டு, நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை உள்ளது. அசுரனை சம்ஹாரம் செய்வதற்காக மூகாம்பிகையாக அம்மன் அவதரித்து, வெற்றியும் பெற்றாள். ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனை ஸ்தாபித்த இடம் கொல்லூர். அம்பிகை லிங்க வடிவமாக, சுயம்பு திருமேனியாக காட்சி தரும் ஒரே தலம் இது மட்டும் தான். இந்த லிங்கத்தின் நடுவே சொர்ண ரேகை உள்ளது. இந்த லிங்கத்தின் ஒரு பகுதியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும், மற்றொரு பாகத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் ஐக்கியமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
வழக்கமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் மட்டும் தான் சென்று வழிபடுவார்கள். ஆனால் இசை மற்றும் நடனக் கலைஞர்கள் தங்களின் கலை பயணத்தை துவங்குவதற்கும் முன்பும், அதற்கு பிறகு நன்றிக் கடனாகவும் வந்து வழிபடுவது இந்த கோவிலில் மட்டும் தான். இசைஞான இளையராஜா, பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ஆகியோருக்கு இக்கோவிலில் சிறப்பு கெளரவம் வழங்கப்படுவது வழக்கம். ஏறக்குறை 40 வருடங்களுக்கும் மேலாகன தன்னுடைய பிறந்த நாளன்று கொல்லூர் சென்று மூகாம்பிகையை வழிபட்டு, அங்குள்ள சரஸ்வதி மண்டபத்தில் பாடுவதை யேசுதாஸ் வழக்கமாக வைத்துள்ளார். அந்த நாளில் அவர் பாடிய பிறகு தான் மற்ற கலைஞர்கள் பாட அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் இளையராஜா, கொல்லூர் செல்லும் போதெல்லாம் அம்மனை மிக அருகில் சென்று தரிசனம் செய்யும் அனுமதியும், கருவறைக்கு அருகில் தனியாக அமர்ந்து தியானம் செய்யும் அனுமதியையும் கோவில் நிர்வாகத்தினர் வழங்கி உள்ளனர்.
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
பாசத்திற்குரிய.. தமிழ்த்திரு பாரதிராஜாவுக்கு ஓர் புகழாரம்!
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
சினிமாவின் சிகரம் சரிந்தது!
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}