புதுச்சேரியில் உடைகிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி? திமுக தலைமையின் அதிரடி முடிவு
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 09ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் துவங்கி மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. யார் அதிக இடங்களில் போட்டியிடுவது என்பதில் இரு கட்சிகளுக்கு இடையில் இழுபறி நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் போட்டியிட்டு வந்துள்ளது. இந்த முறை திமுக.,வின் பலம் அதிகரித்திருப்பதால் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து, அதிக இடங்களை கைப்பற்றி, தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் கட்சி தலைமையும் விடாப்பிடியாக தாங்கள் அதிக இடங்களில் போட்டியிட உள்ளதாக கூறி வருகிறது.
இதற்கிடையில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை மனுத்தாக்கல் செய்யுமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? இதற்கு காங்கிரசின் ரியாக்ஷன் என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள விருப்பம் இல்லாததாலும், எப்படியும் காங்கிரஸ் தங்களுக்காக விட்டுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் திமுக தலைமை மற்றொரு தகவலையும் கட்சியினருக்கு கூறி இருக்கிறதாம்.
புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்புமனு தாக்கல் செய்தாலும், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்த விவகாரம் முடிவு வந்தால், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தர்கள், தங்களின் மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என்றும் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திமுக சார்பில் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமான முடிவுக்கு வருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, பரபரப்பு நொடிக்கு நொடி அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக நேற்றே நேர்காணலை முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.