பனையூரில் தவெக தலைவர் விஜய் காரை மறித்த பெண் நிர்வாகியால் பரபரப்பு

Meenakshi
Dec 23, 2025,05:08 PM IST

சென்னை: சென்னை பனையூரில் விஜய் காரை தவெக பெண் நிர்வாகி அஜிதா முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களுக்கான அடுத்தகட்ட அறிவிப்புகள் இன்று வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகாலை முதலே தலைமை அலுவலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். மேலும், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. 




இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் கண்ணீருடன் அலுவலக வளாகத்தில் காத்திருந்தபோது, தவெக தலைவர் விஜயை சந்திக்க முயன்றார். ஆனால், அலுவலக பாதுகாப்பு ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் வளாகத்தில் தொடர்ந்து காத்திருந்தனர். 


அப்போது அந்த வழியாக வந்த விஜய்யின் காரை அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் மறித்தனர். அப்போது நிற்காமல் விஜய்யின் கார் சென்றது. தவெக கட்சியின் மாநில பொறுப்பு கிடைக்காத காரணத்தால் அஜிதா முற்றுகை என்று தகவல்கள் பரவியது. இதனால் தற்போது பனையூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.