தவெக அரசுக்கு முதல் கோரிக்கை.. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்கவுள்ள தவெக அரசு கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிதாக அமையவுள்ள தவெக அரசுக்கு வந்துள்ள முதல் கோரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வெ.ஜமுனாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதிதாக பொறுப்பேற்கும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான் இதனை மாற்றிட புதிய அரசு வந்ததும் கணினி அறிவியல் பாடத்திற்கு என்று முக்கியத்துவம் தந்து கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும்.
கணினி அறிவியல் பாடத்திற்க்கென பி எட் பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியயை கொண்டு சேர்க்க வேண்டும் .வருகின்ற புதிய அரசு மாணவர்களின் எதிர்கால கல்விக்கு முதல் கையெழுத்திட வேண்டும்.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் என்பது அரசு பள்ளியில் இல்லை. அதற்கான பாட புத்தகங்களும் பாட வேலைகளும் இல்லை. இந்நிலையில் மத்திய அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு என்று ஆய்வகங்கள் அமைத்தும் அதற்கான ஆசிரியர்கள் நியமிக்க நிதி தந்தும் தற்போது வரை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் என்பது மூன்று பக்கங்கள் மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகளில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.