ஆளுக்கு முந்தி சீட் வாங்கியாச்சு.. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திணறும் காங்., பாஜக!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் காட்டி வருகின்றன. இது மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.
பாஜக இந்த முறை அதிமுக தலைமையிலான கூட்டணியில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய சில தொகுதிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உதாரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படாததால் கட்சித் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
மறுபக்கம், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல். முருகன், தமிழிசை சவுந்தரராஜன் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், மற்ற தொகுதிகளுக்குச் சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் கட்சியின் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
அண்ணாமலையைத் தேர்தலில் போட்டியிட வைக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. ஆனால் கோவை தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால் ஒப்புக் கொள்கிறேன், வேறு தொகுதி என்றால் விட்டு விடுங்கள். பிரச்சாரம் மட்டும் செய்கிறேன் என்று அவர் கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி என்று சொல்கிறார்கள்.
தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்து ஆலோசனைகளை மேற்கொண்டார். கடைசி நேர மாற்றங்கள் மற்றும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பட்டியல் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.
காங்கிரஸ் கலாட்டா!
காங்கிரஸ் திமுக தலைமையிலான கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சீட் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், செல்வாக்கு இல்லாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தி நிலவுகிறது. இது குறித்து டெல்லி மேலிடத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன.
ராகுல் காந்தி தற்போது கேரளா தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருப்பதால், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் மத்திய தேர்தல் குழு (CEC) கூட்டம் தள்ளிப்போனது ஒரு முக்கியக் காரணம்.
வெற்றி வாய்ப்புள்ள 'பலம் வாய்ந்த' வேட்பாளர்களைக் கண்டறிவதில் சிரமம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சில தொகுதிகளில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்குப் பதில் புதிய முகங்களை நிறுத்தலாமா என்ற ஆலோசனையும் தாமதத்திற்கு வழிவகுத்துள்ளது.
வழக்கம் போல கோஷ்டிப் பூசலும் களை கட்டியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டிகள் சரமாரியாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
இந்த இரு கட்சிகளும் திமுக, அதிமுக தலைமையிடம் கடுமையாக நெருக்கடி கொடுத்து ஆளுக்கு முந்தி சீட் வாங்கி விட்டன. அந்தக் கட்சிகளும் முடிந்தவரை இறங்கி வந்து சீட்டும் கொடுத்து விட்டன. இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தீவிரப் பிரச்சாரத்திலும் பிசியாகி விட்டனர். ஆனால் இன்னும் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருப்பது பேசு பொருளாகியுள்ளது.
இன்று மாலைக்குள் அல்லது நாளைக்குள் இரு கட்சிகளும் தங்கள் அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு மிகக் குறைவாகவே உள்ளது.