கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?

Su.tha Arivalagan
Dec 01, 2025,02:37 PM IST

அகிலா


கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டாது என்பார்கள். அதனால்தான் வீட்டுக்கு வீடு கற்பூரவல்லியை வளர்ப்பார்கள். ஆனால் இன்றைய நவீன சூழலில் செடி வளர்க்க நேரமில்லை. இடமும் இல்லை. எனவே இதுபோன்ற பருவக் காலங்களில் கடைகளிலேயே கற்பூரவல்லி இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி இந்த அருமையான டீயை போட்டு குடித்துப் பாருங்கள். சளி, இருமல் இருந்தால் பறந்தோடும்.


இப்போது எங்கு பார்த்தாலும் மழையாக இருக்கிறது. குளிர் வேறு ஆட்டிப்படைக்கிறது. தென் மாவட்டங்களில் வரலாறு காணாத குளிர் நிலவுவதால் மக்கள் ஏங்கே... எங்க ஊரு ஊட்டி மாதிரி மாறிப் போச்சுங்க.. வாங்கே என்று ஊட்டிக்காரர்களை கலாய்த்துக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட மழை குளிர்காலத்தில் உடல் சூட்டை தணிக்கவும், சீதளத்தால் உண்டாகும் சளியை போக்கவும் கற்பூரவல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு இஞ்சியின் காம்பினேஷன் மிகச் சிறந்த மருத்துவக் குறிப்பு. 


சரி கற்பூரவல்லி இஞ்சி டீ எப்படி போடுவது என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :




கற்பூரவல்லி - 5 இலைகள்

இஞ்சி - 1/2 துண்டு

டீத்தூள் - 1 ஸ்பூன் 

எலுமிச்சை சாறு - 2 சொட்டு

தண்ணீர் - 2 கப்

தேன் - 1 ஸ்பூன்


செய்முறை :


கற்பூரவல்லி மற்றும் இஞ்சியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி நிலைக்கு வரும்போது டீத்தூள், கற்பூரவல்லி,இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் அரை பாதியாக குறைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். பின் அதில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடியுங்கள்.


இந்த டீயை தினமும் குடிக்க சளி , இருமல் நீங்கி சுவாசப்பாதை அடைப்பு இன்றி சீராகும். பசியும் எடுக்கும். உற்சாகமாக உணர்வீர்கள்.


(அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)