பிள்ளை மீது சத்தியம் பண்ண தயாரா?.. இபிஎஸ்.,க்கு ஆவேசமாக சவால் விட்ட சி.வி.சண்முகம்

Su.tha Arivalagan
May 13, 2026,02:49 PM IST

சென்னை : திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை. என் பிள்ளை தலை மீது சத்தியம் பண்ணுகிறேன். அதே போல் எடப்பாடி பழனிச்சாமி அவர் பிள்ளையை நிறுத்தி சத்தியம் பண்ண தயாரா? என ஆவேசமாக சவால் விட்டு பேசி உள்ளார் அதிமுக எம்எல்ஏ., சி.வி.சண்முகம்.


கடந்த சில நாட்களாகவே அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு உள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகு இபிஎஸ் தரப்பில் ஒரு பிரிவாகவும், சி.வி.சண்முகம்-எஸ்.பி.வேலுமணி தரப்பு ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் இபிஎஸ் தரப்பு தவெக அரசுக்கு எதிராகவும், சி.வி.சண்முகம் தரப்பு தவெக அரசுக்கு ஆதரவாகவும் இன்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஓட்டளித்தனர். 


தவெக.,விற்கு ஆதரவாக ஓட்டளித்து, கட்சிக்கு துரோகம் செய்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் சி.வி.சண்முகம் தனது ஆதரவு எம்எல்ஏ.,க்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக பேட்டி அளித்தார். பல திடுக்கிடும் உண்மைகளையும் அவர் ஓப்பனாக பேசி உடைத்துள்ளார்.




சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக எம்எல்ஏ.,க்கள் 47 பேர் கையெழுத்திட்டு தன்னை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்துள்ளதாக கவர்னரிடம் எடப்பாடி பழனிச்சாமி அளித்த கடிதம் போலியானது. எம்எல்ஏ.,க்கள் கூட்டமே நடைபெறாத போது அவர் எப்படி கையெழுத்து வாங்கி இருக்க முடியும். எம்எல்ஏ.,க்களை இபிஎஸ் சந்திக்கவே இல்லை. கொறடா என்பவர்கள் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்டவர் கிடையாது. எம்எல்ஏ.,க்களால் நியமிக்கப்பட்டவர். அவரை வைத்து எங்களை இபிஎஸ் மிரட்டுகிறார்.அதிமுக.,வை உடைக்க வேண்டும் என்ற எங்களுக்கு இல்லை. 


திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்தது உண்மை. என் பிள்ளை மீது சத்தியம் பண்ண நான் தயார். அதே போல் அவர் பிள்ளையை நிறுத்தி சத்தியம் பண்ண இபிஎஸ் தயாரா? அவர் இது பற்றி பேச தயாரா? திமுக தலைவர்கள் எங்களுடன் பேசினார்கள். திமுக., ஆதரவு அதிமுக ஆட்சி என்று சொன்னார். திருமாவளவனை  முதல்வராக்க வாய்ப்பு வந்தது. அவரை முதல்வராக்கி விட்டு, அமைச்சரவையை அதிமுக எடுத்துக் கொள்ள பேசப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக் கொள்ளவில்லை. திமுக-அதிமுக.,விற்கு 33 அமைச்சர்கள் என பேசப்பட்டது அதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றார்.


எஸ்.பி.வேலுமணி பேசுகையில், சசிகலா-தினகரன் இணைக்கப்பட வேண்டும். எல்லோரையும் வெளியே அனுப்புகிறார் பழனிச்சாமி. அதிமுக.,வை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அதிமுக.,வை பலப்படுத்தி, பிளவுப்பட்டிருப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பது தான் எங்களின் வேண்டுகோள். அனைவரையும் அரவணைத்து, அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இப்போதும் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக.,வின் பொதுச் செயலாளர். அவர் சொல்வது போல் கட்சிக்கு நாங்கள் துரோகம் செய்யவில்லை என்றார்.


யார் அந்த 2 திமுக முன்னாள் அமைச்சர்கள்


சி.வி. சண்முகம் தனது பேட்டியின்போது, தான் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மாலையில் சென்னைக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்தாகவும், செங்கல்பட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தபோது 2 முன்னாள் திமுக அமைச்சர்கள் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் எல்லாம் நல்லபடியாக நடப்பதாக கூறியதாகவும், தனக்கு எதுவும் புரியவில்லை என்றும், அடுத்த நாள் காலையில்தான் எல்லாமே தனக்குப் புரிந்தது என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.


இது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. யார் அந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.