அரிதிலும் அரிதான சென்யார் புயல்.. இந்தோனேசியாவில் கரையைக் கடந்தது!
டெல்லி: மலாக்கா நீரிணைப் பகுதியில் உருவான, அரிதிலும் அரிதாக கருதப்படும் புயலானது, இந்தோனேசியாவில் கரையைக் கடந்து விட்டது. இது புயலின் தன்மையுடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடித்து பின்னர் படிப்படியாக வலுவிழந்து விடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலேசியா, இந்தோனேசியா மற்றும் அந்தமான் கடலுக்கு இடையே உள்ள மலாக்கா ஜலசந்தியில் ஒரு வெப்பமண்டல புயல் உருவானது. அதற்கு சென்யார் என்று பெயரிடப்பட்டது. இந்தப் புயலானது, வானிலை ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஒன்று.
காரணம், பூமத்திய ரேகைக்கு மிக அருகில், அதாவது 5°N-க்குக் கீழே, வெப்பமண்டல புயல்கள் உருவாவது என்பது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. இது போன்ற ஒரு புயல் 2001 ஆம் ஆண்டில் 'வாமேய்' என்ற பெயரில் மட்டுமே பதிவாகியுள்ளது. இப்போது, மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது.
குறைந்த கடல் பரப்பு மற்றும் நிலப்பரப்பின் அதிக குறுக்கீடு இருந்தபோதிலும், இந்த அமைப்பு வலுப்பெற்றுள்ளது. இது நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது, ஒரு புயல் வளர்வதைத் தடுக்க எதுவும் இல்லை என்பதற்கான நினைவூட்டல் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சுமத்ரா தீவு முதலில் பாதிப்பு
சென்யார் புயல் வடக்கு சுமத்ராவை நோக்கி நகர்ந்ததால் வெள்ளம், திடீர் மண் சரிவுகள் மற்றும் பலத்த இடியுடன் கூடிய மழை ஆகியவை காணப்பட்டன. இந்தோனேசியாவின் கடற்பகுதியில் புயல் தாக்கிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
சிபோல்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்து விட்டாலும் கூட, மழைப்பொழிவு 24 மணி நேரம் வரை நீடிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலாக்கா நீரிணைப் பகுதியில் புயல் வரலாறு எதுவும் இல்லை.