இது தியாகம்.. டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் பரபரப்பு வீடியோ

Su.tha Arivalagan
Nov 18, 2025,11:26 AM IST

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருந்த டாக்டர் உமர் உன் நபி, தற்கொலை தாக்குதல் பற்றி பேசிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று விசாரணையில் சிக்கியுள்ளது. 


இந்த வீடியோவில், அவர் தற்கொலை தாக்குதலை "தியாக நடவடிக்கை" என்று நியாயப்படுத்திப் பேசியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 28 பேர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.


விசாரணையின் போது கிடைத்த இந்த வீடியோவில், உமர் உன்நபி தனியாக அமர்ந்து, தற்கொலை தாக்குதல் என்ற கருத்தை மிகவும் சாதாரணமாக விளக்கிப் பேசியுள்ளார். அழகான ஆங்கிலத்தில் அவர் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது, தற்கொலை தாக்குதல் என்று பொதுவாக அழைக்கப்படுவது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இதற்கு எதிராக பல முரண்பாடுகளும் ஆட்சேபனைகளும் எழுப்பப்படுகின்றன. ஆனால், இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் இறக்க நேரிடும் என்று நம்பி ஒருவர் மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கை.  




ஒருவர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறோம் என்று நம்பும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இறக்கப் போகிறார் என்ற அனுமானத்திற்கு எதிராகச் செல்கிறார். இல்லையென்றால், நமக்கு ஒரு சூழ்நிலையே இருக்காது என்று கூறியுள்ளார்.


இந்த வீடியோ, மற்றவர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதப் பாதைக்கு இழுப்பதற்காகவே தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.