77வது குடியரசு தினம்.. டெல்லியில் விழாக்கோலம்.. கடமைப் பாதையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!

Su.tha Arivalagan
Jan 26, 2026,10:27 AM IST

டெல்லி: இந்தியா இன்று தனது 77-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. டெல்லி கடமை பாதையில் (கர்தவ்யா பாத்) நடைபெறும் பிரம்மாண்ட விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமை தாங்குகிறார். முன்னதாக தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.


இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.




முன்னதாக குடியரசு தின விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி  நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவின் கௌரவம், பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்தப் பெருவிழா, உங்கள் வாழ்வில் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் ஊட்டட்டும் என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.


முன்னதாக  காலை 10.15 மணியளவில் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வந்திருந்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து அவர் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். 


மறுபக்கம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பாரம்பரிய முறையில் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் விழா நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டார்.


சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருது


சாரட் வண்டியில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த குடியரசுத் தலைவரையும், சிறப்பு விருந்தினர்களையும், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசீய கீதம் முழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


அசோக் சக்ரா விருது இந்தியாவின் 2வது விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்ற சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அதன் பின்னர் குடியரசு தின விழா அணிவகுப்பு தொடங்கியது.