டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

Su.tha Arivalagan
Dec 17, 2025,05:01 PM IST

டெல்லி : டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதாலும், பனிமூட்டம் மிகவும் அதிகரித்துள்ளதாலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, டிசம்பர் 17 அன்று ஒரு முக்கிய அறிவிப்பை டெல்லி அரசு வெளியிட்டது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் (WFH) என உத்தரவிட்டது. மேலும், கட்டுமானப் பணிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இன்று, டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) 329 ஆக இருந்தது. இது 'மிகவும் மோசம்' என்ற பிரிவில் அடங்கும். சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவு பொருந்தாது.




வாகனப் புகையால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க, வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஒரு ஆய்வில், டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் வசிக்கும் 82% மக்கள், தங்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவர் (குடும்ப உறுப்பினர், நண்பர், அண்டை வீட்டார் அல்லது சக ஊழியர்) நீண்டகால காற்று மாசுபாட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 28% பேர் தங்கள் சமூக வட்டத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.


மேலும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, டிசம்பர் 18, 2024 முதல், பி.எஸ் VI (BS VI) தரத்திற்கு கீழ் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு என்.சி.ஆர் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் பி.எஸ் III பெட்ரோல் அல்லது பி.எஸ் IV டீசல் வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். நொய்டா மற்றும் குருகிராம் போன்ற நகரங்களில் மட்டும், 6 முதல் 10 லட்சம் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்படலாம்.