உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா மற்றும் யோகா பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை பாண்டிசெல்வி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக யோகா துறைத்தலைவரும் பேராசிரியருமான டாக்டர் சரோஜா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு யோகா ஆசனங்களை கற்றுக்கொடுத்து, யோகாவின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கமளித்தார்.
அவர் பேசுகையில், “யோகாவை அனைவரும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, உடல் தோற்றம் இளமையாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும். உணவு உண்ணும் போது பேசுதல், செல்போன் பயன்படுத்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். அமைதியான மனநிலையுடன் உணவை உண்ணுவது உடல்நலத்திற்கு நல்லது. மேலும், ஒவ்வொருவரும் கட்டாயம் தினமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்” என்றார்.
இளமையான தோற்றத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெற நல்ல எண்ணங்கள் அவசியம் என்றும், உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதிக ஆசை, பொய், திருட்டு, பிறருடைய பொருட்களை அபகரித்தல் போன்ற தீய குணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாணவர்கள் உண்மை பேசுதல், ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்தல், அவர்களது அறிவுரைகளை பின்பற்றுதல், நண்பர்களுடன் நல்லுறவுடன் பழகுதல், பொய் பேசுவதைத் தவிர்த்தல் போன்ற நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டால் நல்ல எண்ணங்கள் உருவாகும் என்றார். இளம்பருவத்திலேயே நல்ல சிந்தனைகள் உருவாகுவது யோகாவின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“மனது என்பது உடலில் காணப்படும் ஒரு உறுப்பு அல்ல; நமது எண்ணங்களின் வெளிப்பாடே மனம். நல்ல எண்ணங்களை சிந்திப்பதன் மூலம் நமது ஆளுமை, குணநலன் மற்றும் சிந்தனைத் திறன் மேம்படும்” என அவர் விளக்கினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு விருச்சாசனம், வஜ்ராசனம், பத்மாசனம் உள்ளிட்ட யோகா ஆசனங்களின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. விருச்சாசனம் மனக்குவிப்பை அதிகரித்து கவனத்தை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. வஜ்ராசனம் செரிமானத்தை சீராக்குவதோடு வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. பத்மாசனம் நரம்புகள் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குவதில் பயனுள்ளதாக உள்ளது என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி மாணவர் கோபி பங்கேற்றார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.