எங்கே பாரதி?

Su.tha Arivalagan
Jun 17, 2026,12:26 PM IST

- டிலாணி ஸ்ரீதரன் 


பாரதத்தின் மகிந்தனே!

பாட்டுடைத் தலைவனே!


தமிழ்த்தாயின் பாவலனே!

பைந்தமிழின் காவலனே!


தேசத்தின் எழுச்சிக்கு

போராடிய தேசியக்கவியே!


தேசத்தையே மறந்து 

அந்நியதேசம் ஓடுகின்றோமே!


மண்ணடிமை ஒழிக்க

மன்றாடிய மகாகவியே!




மண்ணை மலடாக்கி

மரணங்களை புதைக்கின்றோமே!


பெண்ணடிமை வேண்டாமென குரலெழுப்பிய

பேரொளியே!


அணங்குகளின்

அடிமைத்தனமின்றும்

குறையவில்லை

பாராய்!


பெதும்பைகளை

பத்து நிமிடம்

தனியாக விடமுடியவில்லை!


காரிகைகளை கருவருக்கும்

அறுவருப்பான

அரக்கர்களுமிங்கே!


செவிப்பறை கிழிய

கத்தினாலும் செவிடர்களாயிங்கே!


சாதிபேதம் இல்லையென

கொட்டிய முரசொலியே!


யாசகர்களை

சாக்கடையிலமர்த்தி

வேடிக்கை

பார்ப்பவருமிங்கே!


சட்டம் பேசியே

சமூகத்தை கெடுப்பவருமிங்கே!


அந்நியர் ஆட்சியில்

தமிழைமீட்ட வீரகவியே!


நாலுவார்த்தைக்கு

ஒருவார்த்தை

அந்நியமொழியின் கலப்புமிங்கே!


ஆண்பெண் சமத்துவமென்ற

ஆணினத்தின்

சத்தியதாசனே!


அர்த்தநாரியாகிய 

அரவாணிகளை

எள்ளிநகைத்து

ஏமாற்றுபவருமிங்கே!


வார்த்தைகளால்

வன்முறைகளை ஒழித்த

பாரதி எங்கே!


எம்மவர் குருதியில் உறைந்த பாரதியெங்கே?


அச்சம் தவிரென்ற

வரிகளில் வலிமையாகிய பாரதியெங்கே?


முறுக்குமீசை முண்டாசுகவியின்

குணத்தை சுவாசித்தவரெங்கே??


ஒவ்வொரு குடிமகனும்

தமிழன்னை பெற்றெடுத்த

முத்தையாவாக மாறவேண்டுமிங்கே!


பாரதி யாரென்று

பாரதியாராக வாழ்ந்து காட்டிட முழங்கும் சங்கே!