தமிழே என் மூச்சு
- டிலாணி ஸ்ரீதரன்
சங்கத் தமிழையே சந்தனப் பேழையென்பேன்
வங்கக்கடலில் உதித்த நல்முத்தென்பேன்,
அங்கத்தை ஆட வைக்கும்
அணித் திரண்ட
அமுது மொழியென்பேன்,
பங்கத்தை தராத பவித்திர குவளயமாகிய அட்சய பாத்திரமென்பேன்,
தங்கமாய் தரம் குறையாத தன்னிகரற்ற
தமிழென்பேன்,
வள்ளுவனும் வாய்மொழிந்த
வான்புகழ் என்பேன்,
பாரதியும் பாவிசைத்த
பாமரனின் வண்ணத்தமிழ் பாட்டென்பேன்,
அகத்தியனும் அள்ளிப் பருகிய அணையாத அகல் விளக்கென்பேன்,
கம்பனும் கவிதை எழுதி களைத்தே போகாத கன்னித் தமிழென்பேன்,
முத்தமிழாய் கொஞ்சி விளையாடும் மூத்தோரின் வாசகமென்பேன்,
காற்றாய் கலந்து
கதைப்பேசும் பொதிகை மலையின் பிறப்பென்பேன்,
பாவேந்தரும் முகர்ந்த பழந்தமிழ் பாக்கள் என்பேன்,
பல்லாயிரம் கருக்கள் சுமந்த அன்னை மொழி என் சுவாசம் என்பேன்,
ஔவையும் ஆதி மொழியாய் இசைத்த
பழமையின் புதுமை என்பேன்,
தொல்காப்பியரும் சீராட்டிய தொடரிசையான தொன்மை இதுவென்பேன்,
ஆன்றோர் சான்றோரும்
வியக்கும் அழகு பிள்ளை மொழி என்பேன்,
நற்றமிழாய், இன்பத் தமிழாய் நாளும் போற்றும் இமயமென்பேன்,
இயற்றமிழாய், இசையாய் இராவணன்
இயற்றிய இன்னமுத இராகமென்பேன்,
சொல்ல சொல்ல முடியாத சொக்கத்தங்கமாகிய தொன்மையின் தொடரிசையும் இதுதானென்பேன்,
தமிழின் பேச்சாய் தமிழரின் மூச்சாய்
எங்கும் படர்ந்தது என் தமிழ் என்பேன்,
பாகுபாடில்லாத கொங்கு தமிழ் கொஞ்சும் மொழியின்
சுவையென்பேன்,
எங்கும் தமிழை விதைத்து எட்டுத்திக்கும் பரவிட வான் மழையாய் பொழிந்திடு என்பேன்,
வாகை சூடியே வாழ்த்துகள் பல பெற்று என்றும் குன்றாத பலத்தோடு
வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பேன்...
வாழ்க தமிழ் வளர்க வையகம்