Dilani Sridharan Poem: பேரழகு!
Sep 26, 2026,03:26 PM IST
- டிலாணி ஸ்ரீதரன்
கார்முகில் கூந்தலை சுருள்சுருளாக்கி
சிரத்தில் சூடிக் கொண்டவர்களோ?
வான்நிலவு மயங்கும் இரவில் இரவலாய்
முகத்திற்கு வர்ணனை பெற்றவர்களோ?
சீறிப்பாயும் வேங்கையின் சீற்றத்தையும்
வலிமையையும் தன்னுள் அடக்கியவர்களோ?
மயிலிறகின் வளைவை ஒத்த வீரத்தின்
அடையாள முறுக்கு மீசை பூண்டவர்களோ?
முள்ளிருக்கும் கற்றாழையின் உள்ளிருக்கும் நாரெடுத்து
தாடியாக்கிக் கொண்டார்களோ?
கூர்வாள் போன்ற கண்ணும்
போர்வாள் போன்று காக்கும் இமையும் பெற்றவர்களோ?
நெஞ்சுயர்த்தி நிற்கும் நேர்கொண்ட பார்வையும்
யாருக்கும் அஞ்சாத தன்மையும் கொண்ட பாரதியானார்களோ?
வீரத்தில் விளைந்த கோமகன்களாய் நாடாளப் பிறந்தவர்களோ?
பெண்மையையும் மென்மையையும் உணர்ந்து
தலைவர்களாய் இன்று வீடாளுகின்றார்களோ?
ஆண் என்றாலே அழகுதான்,
அதிலும் அன்புள்ள ஆண் என்றால் பேரழகுதானே!