தனிமைக் காதலன்.. எழுதுகோலுடன் என் பொழுதுகள்!

Su.tha Arivalagan
May 26, 2026,04:48 PM IST

- டிலானி ஸ்ரீதரன்


தனிமய தகர்த்தெறிய

வந்ததொருக் காலமுனு இனிமய சேக்க 

இணஞ்சேன் அவனோட,


இரவுப்பகல் பார்க்கல இம்சையினு நெனைக்கல 

ஒட்டுறவு வேணாம்னு ஒட்டிக்கிட்டான் என்னோட,


மையிட்ட கன்னத்துல உரசித்தான் போகையில

பொய்யிட்ட கற்பனையும் பொங்குதே வர்ணனையோட,


விரும்பியவன ஏற்கையில வெரப்பாத்தான் நிக்கிறான்

அரும்பானக் காதலையும் அழகாத்தான் வடிக்கிறான்,




தூவலாத் தவழ்ந்து  

தூறலாத் தீண்டுறான் தலையையும் தடவிவிட்டு தாளுல மிதக்குறான்,


பெத்தவங்களயும் மத்தவங்களயும் தரம்பார்த்து பிரிக்கிறான் 

உத்தமமா எழுதியே ஒசத்தியுங் காட்டுறான்,


நாட்டு நடப்பு கேட்டுப்புட்டா 

பாட்டாத்தான் படிக்கிறான் பல்லவியும் பஞ்சமில்லாம இசைக்கிறான்,


அநியாயத்த காணயில

அழுதுகிட்டே உருகுறான்... நியாயம்  கெடச்சி புட்டா நிம்மதியா உறங்குறான்,


கண்டதெல்லாம் கவியாக்கி கட்டிமுத்தங் கொடுக்குறான் 

உண்டதெல்லாம் உரைத்திட உடம்பெடைய குறைக்கிறான்,


அல்லும் பகலும்

உழைக்கயில அமைதியா சாயிறான்,

சிந்தனயிலே சிக்குறத

அருவியா கொட்டுறான்,




கையோட பிண்ணிக்கிட்டு 

கடியுந்தா வாங்கிகிட்டு ஐயோடா!!! நினைக்கையிலே 

சாரலாத்தா வருடுறான், 


சிரிச்ச மொகமும் 

சிந்தைத் தெளிவும்

தந்த மச்சான் சீண்டிப் போகயில சித்திரமும் வரஞ்சுருவான்,


விரல் கோர்த்து நடக்கையிலே 

விடியலும் புதுசாச்சி நினைவோட நெருங்கயில கனவுகளும் பழிச்சாச்சி,


காவலுக்கு வந்திருந்து கவலைகள தீர்த்திடுவான் எண்ணத்துல நெறஞ்சிருந்து 

ஏட்டுலதான் நீந்திடுவான்,


இன்பமோ துன்பமோ எப்போதுங்கூட இருப்பான்

 இலக்கியமா மொழிஞ்சி

இலக்கணத்தக் காத்திடுவான்,


எழுதியெழுதி 

ஏமனக்கொறய 

தீர்த்திடுவான் 

ஏகாந்தமே இல்லாமப் போக்கிடுவான்,


மைதீர்ந்துப் போச்சுதுனா  மையல் கொண்டத நிறுத்திடுவான் 

கதகதயா சொல்லி குருதியவே குறச்சிடுவான், .....


உறஞ்சிப் போனப் பின்னே உசுரையும் இழந்திடுவான்,

உயிரோடிருந்த  நிமிசத்தையும் காவியமாக்கிடுவான்,


கண்ணீர் நிறைந்த கடைசிப் பக்கத்த சொல்லத்தான் வேணுமா  

வாழ்ந்தக்கத முடிஞ்சா குப்பைக் குழிதான்  வீடம்மா