சத்தமில்லாச் சத்தங்கள்

Su.tha Arivalagan
Apr 13, 2026,05:04 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


தாய்ப்பாலின் உன்னதம்

அறியாத அனாதைகள்,

ஊனத்தோடு பிறப்போரின்

ஊசலாடும் எண்ணங்கள்,


காட்டுமிராண்டிகளால்

கருவறுக்கப்படும்

சிசுக்களின் வலிகள்,

கள்ளிப்பாலில்

பலியாகும்

பெண்ணுயிர்களின்

ரணங்கள்,


மூர்க்கத்தனமான கணவனிடம்

அனுபவிக்கும் கொடுமைகள்,

மலடியென்ற

பட்டத்தில் மனமுடையும்

பெண்மைகள்,




மாதவிடாயில் முடக்கும்

தேகத்தின் மாற்றங்கள்,

இணையர்களை இழந்தவர்களின்

தனிமையின்

தவிப்புகள்,


முதியோர் இல்லத்தில்

விடப்பட்டவர்களின்

கண்ணீர்த்துளிகள் ,

வறுமையறியாத

பிஞ்சுகளின்

நெஞ்சத்துக்

குமுறல்கள்,


சொல்லிலடங்காத 

வேதனைகளும்

சொல்லித் தீராதவைகளும்

விதியென விளையாடும்


சத்தமில்லாத சத்தங்களாக....!