லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
புதுடெல்லி: ரூ.634 கோடி மதிப்பிலான லஞ்ச ஊழல் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், தன் மீதான லஞ்சப் புகார் வழக்கின் விசாரணையை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி:
திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.என்.நேரு மீது, அதிகாரிகள் நியமன விவகாரத்தில் சுமார் 634 கோடி ரூபாய் அளவிற்கு நிதி முறைகேடு மற்றும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்கு கோரியும், தன் மீது வழக்கு தொடர தடை விதிக்கும் படி கோரியும் கே.என்.நேரு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் கே.என்.நேருவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து கே.என்.நேரு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கே.என்.நேருவுக்கு சொந்தமான 25 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு, குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்களை கைப்பற்றியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. ஆனால் இதனை கே.என்.நேரு மறுத்திருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு:
இந்நிலையில் இன்று கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை முழுமையாக நிராகரித்து தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் தங்களது உத்தரவில், "அமைச்சராக இருந்த கே.என்.நேரு தன் மீதான லஞ்சப் புகார் வழக்கின் விசாரணையை எதிர்கொண்டே ஆக வேண்டும்" என்று தெளிவாக அறிவுறுத்தினர். இதன் மூலம், இவ்வழக்கில் சட்டரீதியான விசாரணையைத் தவிர்க்க முயன்ற முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 634 கோடி ரூபாய் அளவிலான பெரிய தொகையிலான லஞ்ச வழக்கு என்பதால், இதற்கான விசாரணை இனி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சராக இருந்த காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், உச்சநீதிமன்றம் விசாரணையைத் தொடர உத்தரவிட்டுள்ளது அரசியல் களத்தில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து விட்டது என்பதால் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்தேி தீர வேண்டிய கட்டாயத்தில் தமிழக காவல்துறை உள்ளது. அப்படி வழக்கு தொடரப்பட்டால் எந்த நேரத்திலும் கே.என்.நேரு கைது செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.