TVK: குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Su.tha Arivalagan
May 25, 2026,06:49 PM IST
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தவெகவில் இணைந்துள்ளதைக் கண்டித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

எஸ்.பி. வேலுமணி குழுவைச் சேர்ந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இது அதிமுக தரப்புக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பையும் அதிர வைத்துள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:

Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.



இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.