திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
சென்னை : தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (22-09-2026) செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
நேரடி குதிரை பேரக் குற்றச்சாட்டு:
தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, "இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழகத்தில் தான் முதன் முறையாக நேரடியாகக் குதிரை பேரம் நடந்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். மேலும், மக்கள் பிரதிநிதிகள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து விமர்சித்த அவர், "பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களால் மக்களது கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை; இதனால் அவர்கள் வாக்காளர்களைச் சந்திக்க முடியாமல் திணறி வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
ஜெம் வீரமணி வழக்கு குறித்து விளக்கம்:
இதனைத் தொடர்ந்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ஜெம் கிராமனைட்ஸ் வீரமணி வழக்கு தொடர்பாக திமுக அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான விளக்கமளித்தார். "ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீது திமுக ஆட்சிக் காலத்தில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது" என்று சுட்டிக்காட்டிய அவர், "திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது" என்றார். மேலும் , ஜெம் வீரமணி வழக்கு கைவிடப்பட்டுவிட்டதாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை. மேல் நடவடிக்கை எடுப்பதற்காகப் புதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படைக்காகவே காத்திருந்தோம்.
சட்டப்பூர்வமான தகுந்த ஆதாரங்கள் கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஜெம் வீரமணிக்கும் திமுக என்ற கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஜெம் வீரமணி வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழக அரசியலில் கட்சித் தாவல்கள், தவெகவின் தேர்தல் களம் மற்றும் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்து முன்னாள் அமைச்சர் ரகுபதியின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.