DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
Mar 29, 2026,07:04 PM IST
சென்னை: வருமான வரி கட்டாத இல்லத்தரசிகள் பலன் பெறுவதற்காக இல்லத்தரசிகள் என்ற புதிய திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-க்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதில் பெண்களைக் கவரும் வகையிலும், நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும் ‘இல்லத்தரசி’ என்ற புதிய புரட்சிகரமான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம், இல்லத்தரசிகள் தங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை எளிதாக வாங்க உதவுவதாகும்.
வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், டி.வி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.
ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய மின் சாதனங்களுக்குப் பதிலாகப் புதிய பொருட்களை வாங்க விரும்புவோரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிரத்யேகக் கூப்பன்கள் வழங்கப்படும்.
இந்த கூப்பன்களைப் பயன்படுத்தி, இல்லத்தரசிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கடைகளிலேயே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு முன்னுரிமை?
இத்திட்டமானது வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகளுக்கு முன்னுரிமை அளித்துச் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பணிச்சுமையைக் குறைப்பதோடு, நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார். திமுக-வின் இந்த இல்லத்தரசி திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது குறிப்பிட்ட பொருட்களை இலவசமாக வழங்குவதற்குப் பதில் மொத்தமாக வீட்டுக்குத் தேவையான பொருட்களை கூப்பன் மூலம் வாங்கும் திட்டமாக இதை திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.