தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் நெருக்கடியோ, மறு தேர்தலோ நடப்பதை திமுக விரும்பவில்லை. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவர் ஆட்சி அமைக்க திமுக தடையாக இருக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு அவர்களுக்கு எந்தவிதமான அரசியல் நெருக்கடியும் அல்லது தொந்தரவும் கொடுக்காமல் திமுக பொறுமை காக்கும்.
காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கும் அல்லது கூட்டணி அமைக்கும் என நிலவிய வதந்திகளை திட்டவட்டமாக மறுக்கிறேன். மக்கள் வழங்கிய தீர்ப்பின்படி, திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
விஜய் அறிவித்துள்ள ரூ. 2,500 மகளிர் உதவித்தொகை மற்றும் 6 இலவச சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்றாலும், அவர்கள் அதைச் செய்தால் மகிழ்ச்சிதான் அல்லது குறைந்தபட்சம் நாங்கள் கொடுத்ததைத் தொடர்ந்தாலே போதும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், திமுக ஒரு முதிர்ச்சியான எதிர்க்கட்சியாகச் செயல்படத் தயாராகி வருவதை இந்த அறிக்கை காட்டுகிறது.