விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

Su.tha Arivalagan
Jun 29, 2026,04:13 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் பொதுமறை தமிழ்ச்சங்கம், மதுரை உலக தமிழ்ச் சங்கம் அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் பேரவை உறுப்புச் சங்கம் நிகழ்த்திய திருக்குறள் திருவிழா 2026, ASG திருமண மண்டபம் விழுப்புரத்தில் நடைபெற்றது.


விழுப்புரம் பொதுமறை தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. 1.1.2026 முதல் 30.3.2026 வரை மரபுப்பா பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றமைக்கு மரபுப் பாவலர் என சான்றிதழ் கனவு ஆசிரியர் திருக்குறள் தூதர் எழுத்தாளர் கவிஞர் கோ லதா அவர்களுக்கு மரபு ஆசான் தமிழ்த்திரு. மைசூர் இரா கர்ணன் மற்றும் தமிழ்த்திரு. கார்த்திகேயன் மாவட்ட கல்வி அலுவலர் திருவண்ணாமலை  அவர்களால்  வழங்கப்பட்டது. 


திருக்குறளில் உள்ள நட்பியல் அதிகாரத்திற்கு கவிதை வழங்கி கவியரங்க நிகழ்வில் பங்கேற்றமையை பாராட்டி பொதுமறை பற்றாளர் விருது கேடயம் தமிழ்த்திரு. கனகேசன் காவல்துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி தமிழ்த்திரு. கலியன் விழுப்புரம் பொதுமறை தமிழ் சங்க தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.




இதற்கு கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


ஆசிரியர் கோ. லதாவின் பிற கவிதைகள்


பத்துப்பாட்டின் பரிமளம்


திருந்தா தமிழின் திருவின் மாலை  

திசைகள் தோறும் தேன் மணக்கும்  

பத்துப் பாட்டு பைந்தமிழ் காவியம்  

பாடல் தோறும் பண்பு பரப்பும்  


திருமுருகு ஆற்றுப் படைசொலும் வேலவன்  

திருவருள் பெருமை திங்கள் நிகர்த்தது  

பொருநர் ஆற்றுப் படைபுகழ் கரிகால்  

பொன்னி நாட்டின் பொலிவை காட்டும்  


சிறுபாண் ஆற்றுப் படைசெப்பும் நல்லியன்  

சீரும் சிறப்பும் செழுமை வளமும்  

பெரும்பாண் ஆற்றுப் படைபேசும் தொண்டை  

பெருவளம் காட்டும் பேரரசன் திறமும்  


முல்லைப் பாட்டு முல்லை நிலத்தின்  

முகில் கண்டு மகிழும் மென்மை காட்டும்  

மதுரைக் காஞ்சி மதுரை நகரின்  

மாண்பும் வீரமும் மாறாது சொல்லும்  


நெடுநல் வாடை நெஞ்சை உருக்கும்  

நெடியோன் பிரிவில் நேரிழை வாடல்  

குறிஞ்சிப் பாட்டு குன்றக் குமரன்  

குலவிய காதல் குவலயம் போற்றும்  


பட்டினப் பாலை பாண்டியன் நாட்டின்  

பாலை நிலத்தும் பண்பை விளக்கும்  

மலைபடு கடாம் மலையின் செல்வம்  

மன்னன் நன்னன் மாட்சி பாடும்  


பத்துப் பாட்டின் பரிமளம் என்றும்  

பாரினில் வீசும் பழந்தமிழ் வாசம்  

படித்தோர் நெஞ்சம் பண்பில் மலரும்  

பாட்டின் சுவையே பாரில் அழியாதே


--


நட்பியல்




திருவள்ளுவன் சொன்ன திருவாக்கு கேளாய்  

நட்பு என்பது நல்லார் கூட்டம்  

ஆராய்ந்து கொள்ள அறிவுடை நெஞ்சே  

அறிவிலி கூடின் ஆக்கம் கெடுமே  


நெருப்பில் இட்டு நேர்மை பார்து  

நெஞ்சம் தூய்மை நெறி கண்டு  

பின்னர் கொள்ள பெருமை உண்டு  

பேதை கூடின் பிழைத்து விடுவாய்  


பொய்யர் கூட்டம் பொருள் வந்த வேளை  

பூவாய் சிரிக்கும் புன்மை உடையர்  

துன்பம் வந்தால் தூரம் செல்வர்  

தூய நட்போ துணையாய் நிற்கும்  


பழைய நட்பு பழுத்த பழமே  

பாசம் குன்றா பண்பின் நிழலே  

இடைமறித்தாலும் இகழ்ந்திடாதே  

இன்னல் காலம் இதயம் காக்கும்  


கூடா நட்பு குழியில் தள்ளும்  

குணமற்றோர் கூட்டம் கொல்லும் உன்னை  

தீயர் நட்பு தீயில் வேகும்  

திருந்தா உள்ளம் திருட்டை கற்கும்  


உடுக்கை இழந்தவன் கைபோல் வந்து  

உயிரை காப்பது உண்மை நட்பு  

பொருள் இருந்தால் பொங்கி வருவோர்  

பொய்யர் என்று புறமே விடுவாய்  


நகைமுகம் காட்டி நயந்து பேசி  

நஞ்சை உள்ளே நனைத்து வைப்போர்  

நண்பர் அல்லர் நயவஞ்சகர்  

நல்லவன் கூட நாடி அறிவாய்  


பகைவன் கூட பாசம் காட்டின்  

பயன் இல்லை பாழே வாழ்கை  

நண்பன் கோபித்து நலம் புரிந்தால்  

நன்மை அதுவே நாளும் தேவை  


ஈன்றாள் போல இருந்து காப்போன்  

ஏழை என்றும் இகழ்ந்திடான்  

உள்ளம் ஒன்றி உரைகள் பகிர்வோன்  

உயிரின் பாதி உண்மை நண்பன்  


வள்ளுவன் வாக்கு வழிதான் நட்பு  

வாய்சொல் அல்ல வாழ்வின் துணை  

நல்லாரை தேர்ந்து நயந்து கொள்வாய்  

நாளும் வாழ்வில் நலமே பெருகும்


--


வாழ்க்கை என்பது எது வரை

 

பிறப்பெனும் புள்ளியில் தொடங்கும் பயணமடா,  

இறப்பெனும் எல்லையில் முடியும் கதையடா!  

இடையினில் வருவதே வாழ்க்கை என்றறிவாய்,  

இன்பதுன்பம் இரண்டிலும் கலந்திடும் கலையடா!  


ஆசைகள் அலையென அடிக்கும் கடலடா,  

அறிவெனும் துடுப்பினால் கடக்கும் ஓடமடா!  

நேசமும் பாசமும் சுமக்கும் பாரமடா,  

நேர்மையே துணையெனில் இனிக்கும் வாழ்வடா!  


காலமெனும் நதியிலே கரையும் நாள்வரை,  

கடமையைச் செய்திடு கலங்காது நீவரை!


--


வாழ்க்கை என்பது எது வரை


பிறப்பெனும் புள்ளியில் தொடங்கும் பயணமடா,  

இறப்பெனும் எல்லையில் முடியும் கதையடா!  

இடையினில் வருவதே வாழ்க்கை என்றறிவாய்,  

இன்பதுன்பம் இரண்டிலும் கலந்திடும் கலையடா!

[29-06-2026 15:43] Arivu Alagan: ஆசைகள் அலையென அடிக்கும் கடலடா,  

அறிவெனும் துடுப்பினால் கடக்கும் ஓடமடா!  

நேசமும் பாசமும் சுமக்கும் பாரமடா,  

நேர்மையே துணையெனில் இனிக்கும் வாழ்வடா!  


காலமெனும் நதியிலே கரையும் நாள்வரை,  

கடமையைச் செய்திடு கலங்காது நீவரை!


--


நுண்ணறிவு


நுண்ணறிவு சுடரென நெஞ்சினில் ஏற்றியே,  

எண்ணமெனும் ஏட்டினில் எழுத்தினைத் தீட்டியே!  

காலவெள்ளம் கரைத்திடா கருத்தினைக் கூட்டியே,  

ஞாலம்போற்றும் நூலதனை நாளுமே காட்டியே!  


வாழ்வின் உண்மை வளமுற வார்த்திடு சொல்லிலே,  

தாழ்விலாத தத்துவம் தாங்கிடு வெல்லிலே!  

பொய்யகற்றும் மெய்யுரை பொலிந்திடச் செய்துமே,  

மெய்யறிவின் வாசலை மேதினிக்கு உய்த்துமே!  


ஊழிதோறும் அழியாத உயர்ந்தநூல் ஆக்கிட,  

வாழிதோறும் வாசித்தே மாந்தரும் ஊக்கிட,  

ஆழிகாலம் தாண்டியும் அறிவொளி வீசிடும்,  

வாழிநுண்ணறி வின்திறன் வையமே பேசிடும்!


--


நவரசங்கள்




சிரிப்பெனும் இன்பமும் சினமெனும் தீயுமே,  

இரக்கமும் வீரமும் இருள்சோகம் தானுமே!  

அச்சமும் அற்புதம் ஆவலும் சேர்ந்திட,  

உச்சமாம் வெறுப்புடன் ஒன்பதாய் விரிந்திட!


வீரமே எழுச்சியாய் வினைகளை முடித்திடும்,  

காரமாம் சினம்தனை கடமையால் அடக்கிடும்!  

இன்பமே வாழ்வினில் இளந்தென்றல் வீசிடும்,  

துன்பமோ பக்குவம் துலங்கிடச் செய்திடும்!  


அச்சமும் அவசியம் அறிவினைக் காத்திட,  

அற்புதம் வியப்பினை அகத்தினில் ஊட்டிட,  

நவரசம் கலந்ததே நம்மனித வாழ்க்கையாம்,  

அவரவர் மனத்திலே அரங்கேறும் நாடகம்!


--


ஏழ்மையின் முகவரி


ஏழ்மையின் முகவரி என்றே எழுதிய ஓலையை,  

வாழ்வின் உழைப்பினால் வாங்கி கிழித்திடு!  

கூரை இல்லாக் குடிலெனக் கூறிய நிலையை,  

வீர உளத்தினால் வீடென மாற்றிடு!  


கனவென எண்ணிய கல்லின் கட்டடம்,  

நனவென ஆக்கிட நாளும் உழைத்திடு!  

வியர்வைத் துளியே விலையுயர் செங்கலாம்,  

உயர்வின் அடித்தளம் உண்மையின் நெஞ்சலாம்!  


கடனெனும் சுமையிலே கலங்கி நில்லாதே,  

திடமெனும் தூணினால் தீர்வினைக் காண்பாய்!  

கைகளில் சக்தியும் கருத்தினில் வித்தையும்,  

மெய்யெனும் வீடதை மேதினி கட்டுமே!


--


வழித்தோன்றல்


வழித்தோன்றல் என்பதே வையத்தில் வாழ்வதாம்,  

விழித்தேர்ந்து பின்பற்ற வேண்டுவோர் யாரெனில்!  

பொய்யிலா வாழ்வினைப் பொலிவுடன் வாழ்ந்தவர்,  

மெய்யறம் காத்திடும் மேன்மையர் தாள்களே!  


அன்பினை விதைத்திடும் அருளுடைச் சான்றோரின்,  

இன்பமும் துன்பமும் ஏற்றவர் வழிதனை!  

அறிவினை ஈந்திடும் ஆசானின் அடிச்சுவடு,  

செறிவுடை ஞானியர் சென்றிட்ட பாதையே!  


ஊழ்வினை வென்றிடும் உத்தமர் நெறிதனை,  

வாழ்வினில் துணையென வழித்தோன்றல் கொள்வேனே!  

நேர்மையின் நிழலினில் நிமிர்ந்திட வாழ்ந்தவர்,  

பார்மீது விட்டசெல் பாதையே என்வழி!


--


கடலோர கவிதை


அலையெனும் கவிதையை அனுதினம் பாடிடும்,  

கலைமிகு கடலினைக் கண்ணாரக் கண்டிடு!  

நுரையினில் வெண்பாவும் நீலத்தில் கலித்துறையும்,  

வரைந்திடும் இயற்கையின் வனப்பினைப் படித்திடு!  


கரையினைத் தழுவியே காதலைச் சொல்லிடும்,  

உரைசெயும் ஓசையில் உணர்வெலாம் கொள்ளிடும்!  

சங்குகள் சிப்பிகள் சந்தத்தை மீட்டிடும்,  

எங்கெங்கும் பரவிடும் இன்னிசை கேட்டிடும்!  


ஊழிகள் கடந்துமே உயிர்ப்புடன் நின்றிடும்,  

ஆழியின் பேரலை ஆயிரம் கதைசொலும்!  

கடலோரம் நின்றிடக் கவலைகள் கரைந்திடும்,  

உடலோடு உள்ளமும் உவகையில் நிறைந்திடும்!


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)