ஒருவர் துயரம் ஒருவர் தாங்கி உலகை காப்போம்!

Jun 26, 2026,04:16 PM IST

- முனைவர் கோ. லதா


ஒருவர் துயரம் ஒருவர் தாங்கி  

உலகை காப்போம் உரிமை கொண்டே  

கைகொடுப்போம் கண்ணீர் துடைப்போம்  

காலம் எல்லாம் கனிவாய் இருப்போம்  


பசியால் வாடும் பாலகன் கண்டு  

பரிவாய் உணவு பகிர்ந்து கொடுப்போம்  

வாடிய முகம் வதங்கி கிடந்தால்  

வார்தை கொடுத்து வலிமை செய்வோம்  


நோயால் வீழ்ந்த நொந்தோர் நெஞ்சில்  

நம்பிக்கை விதை நாம் நட்டிடுவோம்  

மருந்தும் மனமும் மாற்றம் தருமே  

மனிதம் என்றும் மறையாது காப்போம்  


போரின் கொடுமை புலம்பி அழுதோர்  

புகலிடம் தேடி புலம்பெயர்ந்தோர்  

அடைக்கலம் தருவோம் அன்பின் இல்லம்  

ஆதரவு தருவோம் ஆறுதல் சொல்வோம்  




ஏழை எளியோர் ஏக்கம் தீர்போம்  

இயலாதோர்கு இடமும் தருவோம்  

சாதி மதம் சமாய் பார்போம்  

சகோதரம் என்று சாற்றி வாழ்வோம்  


முதியோர் தனிமை முடிவில் வாடும்  

முதுகாய் தாங்கி முன்னே நடப்போம்  

குழந்தை சிரிப்பு கோடி பெறுமே  

குறைவிலா கல்வி கொடுத்து வளர்போம்  


பெண்ணை போற்றி பெருமை செய்வோம்  

பேதம் விடுத்து பெருந்தன்மை கொள்வோம்  

ஊனமுற்றோர்கு உறுதுணை நிற்போம்  

உயர்வை தேட உதவி செய்வோம்  


சுற்றுலகம் சுட்டெரிக்கும் முன்னே  

சூழல் காப்போம் சுந்தரம் செய்வோம்  

மரமொன்று நடுவோம் மழை பெய்ய  

மனிதம் வாழ மாசு துடைப்போம்  


ஒரு நாள் அல்ல ஓயாது செய்வோம்  

உள்ளம் உருகி உதவிடுவோம்  

ஆதரவு என்றால் அன்பின் சுடரே  

அணையாது வைப்போம் அகிலம் எங்கும்  


கைகோர்து நிற்போம் கருணை கொண்டு  

கடல் போல் பெருகும் காதல் கொள்வோம்  

சர்வதேசம் சாற்றும் இந்த நாளில்  

சாதனை செய்வோம் சகமானிடம் காப்போமே!


--


எது மகிழ்வது


பொன்னும் பொருளும் பொங்கிடும் செல்வம் 

என்னை நிறைக்கும் இன்பம் அல்ல 

உள்ளம் நிறைய உறவாய் இருப்பார்

அன்பே மகிழ்வு அமைதியே வாழ்வு


--


கண்ணதாசனை பற்றிய கவிதை


சிறுகூடல்பட்டி சிற்றூரில் பிறந்த  

சித்திரக்கவி நீ சிங்கத் தமிழே  

முத்தையா என்ற முழுப்பெயர் கொண்டு  

கண்ணதாசன் என காவியம் ஆனாய்  


ஏழை வீட்டில் எழுந்த புலவன்  

வறுமை வென்று வானம் தொட்டாய்  

கண்ணீர் கடலை கவிதை ஆக்கி  

உலகை அழவைத்து உணர்வை ஊட்டினாய்  


பள்ளி படிப்பை பாதியில் விட்டாய்  

பாட்டால் பல்கலை பட்டம் பெற்றாய்  

திரைப்படத்தில் திரும்பா வரிகள்  

தந்து தமிழை தேனாய் பொழிந்தாய்  


அர்தமுள்ள இந்துமதம் எழுதி  

ஆன்மீகம் பேசி அறிவை விதைத்தாய்  

வனவாசம் வாழ்ந்து வாழ்கை கண்டாய்  

சேரமான் காதலி சரிதை சொன்னாய்  


ஆயிரம் பாடல் ஆயிரம் கருத்து  

ஒவ்வொன்றும் உயிரை உருக்கும் வரிகள்  

காதல் சொன்னாய் கண்ணியம் காத்தாய்  

வாழ்வியல் சொன்னாய் வழியும் காட்டினாய்  


"நிலவை பார்து வான் கேட்டதென்ன"  

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு"  

"மயக்கமா கலக்கமா" என்று கேட்டாய்  

மனித மனத்தை மலர வைத்தாய்  


தத்துவம் பாடி தன்மானம் சொன்னாய்  

குடியும் கூத்தும் குற்றம் என்றாய்  

பின்னர் குடியை குற்றம் சொன்னாய்  

திருந்தி வாழ திருவாக வந்தாய்  


பட்டினத்தார் போல பாட்டு படைத்தாய்  

வள்ளுவர் வழியில் வாழ்வை உரைத்தாய்  

பாரதி கனவை பாட்டில் வளர்தாய்  

தமிழின் நெஞ்சில் தங்கி நின்றாய்  


எம்ஜிஆர் சிவாஜி எஸ்.எஸ்.ஆர் பாட்டில்  

உன் வரிகள் ஒலித்து உயிராய் நின்றன  

எம்.எஸ்.வி இசையில் எழுந்த உன் பாட்டு  

எழுபதுகள் எங்கும் எதிரொலி செய்தது  


காசுக்காய் பாடவில்லை கவிதை  

காலத்திற்காய் எழுதிய காவலன் நீ  

மதுவை குடித்து மயங்கி விழுந்தாய்  

மரணம் வரை மனிதம் பாடினாய்  


இராமன் எத்தனை இராமனடி என  

இராமாயணம் புதிதாய் எழுதினாய்  

கிருஷ்ணன் கதை கீதையின் சாரம்  

கவிதையில் தந்த கவிஞர் பெருமானே  


அரசியல் செய்தாய் அறிஞர் அண்ணாவோடு  

அடுத்து இந்திராவோடு அரவணைந்தாய்  

கட்சி மாறினாலும் கவிதை மாறவில்லை  

உண்மையை மட்டும் உரைத்த கவிஞன்  


பேனா பிடித்து பிழைப்பு தேடாய்  

பேனாவால் வாழ்வை பிசைந்து கொடுத்தாய்  

இலக்கியம் பேச இலக்கணம் சொன்னாய்  

இல்லாதவர்கும் இதயம் கொடுத்தாய்  


உன் கடைசி நாள் சிகாகோ நகரில்  

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை  

"அனுபவி ராஜா அனுபவி" என்றாய்  

வாழ்கையை பாடி வானம் சென்றாய்  


கண்ணதாசன் என்ற கவிச்சுடர் அணையாது  

தமிழ் இருக்கும் வரை நீயும் வாழ்வாய்  

தலைமுறை தோறும் தாலாட்டு பாடுவாய்  

காலத்தை வென்ற கவிஞன் நீயே


--


மீனவன் வேறு மாலுமி நீயே  

மீனை பிடிக்க மீண்டு வருவான்  

நீயோ உலகை சுற்றி வருவாய்  

நாட்டின் தூதுவன் நீயே கண்ணே  


சர்வதேச அமைப்பு சாற்றிய நாள்  

சரித்திரம் பேசும் சாதனை நாள்  

பாதுகாப்பு வேண்டும் பாராட்டு வேண்டும்  

பணிக்கு ஓய்வு பின்னர் வேண்டும்


இளைஞனே நீயும் இலக்கை நோக்கு  

கடலோன் பயிற்சி கற்று கொள்ளு  

அலைகள் அஞ்சாதே அகிலம் ஆள  

அன்னை கடலும் அணைத்துக் கொள்ளும்  


வீர மாலுமி வாழ்க வாழ்க  

வீட்டை விட்டு வெளியேறிய வேந்தே வாழ்க  

கடல் சார் பணியாள் காவலன் வாழ்க  

உலகை இணைக்கும் உத்தமன் வாழ்க


--


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்




ஜூன் இருபத்தாறு வந்ததே உலகில்  

போதை ஒழிப்பு பொன்னாள் இன்று  

விழிப்போம் இளையோர் வீணாய் போகாமல்  

வாழ்வை காப்போம் வாரீர் அனைவரும்  


வெள்ளை பொடியும் வேதனை தருமே  

கஞ்சா கள்ளும் கண்ணை மறைக்கும்  

ஊசி மருந்தும் உயிரை குடிக்கும்  

உலகை அழிக்கும் உருவம் இதுவே  


ஒரு முறை பார்போம் என்று தொட்டாய்  

ஒட்டிக்கொண்டது உயிரின் மூச்சாய்  

நண்பன் சொன்னான் நல்லது என்று  

நாசமாய் போனாய் நாணிடாதே  


கல்லூரி வாசல் காத்திருக்குமே  

காசுக்கு விற்கும் கள்ளர் கூட்டம்  

இளமை கெடுக்க இருட்டில் நிற்பர்  

இன்னுயிர் வாங்கும் இன்னல் வியாபாரம்  


தாயின் கண்ணீர் தரையில் விழும்  

தந்தை மனமோ தீயில் வெந்திடும்  

பிள்ளை கெட்டால் பெற்றோர் நிலை  

பேச வார்தை பேதைமை ஆகும்  


போதை வந்தால் புத்தி போகும்  

பொறுப்பு கெடும் பொருளும் கரையும்  

குடும்பம் சிதறும் குற்றம் பெருகும்  

குடிசையும் வீடும் கூடு உடையும்  


இளைஞன் என்றால் இந்திய நாட்டின்  

இதயம் நீயே எழுச்சி நீயே  

உன்னை அழித்தால் உலகம் எங்ஙனம்  

உயர்ந்து நிற்கும் உரைத்திடுவாய்  


போதை மருந்து பொய்யான இன்பம்  

போலி சிரிப்பு புதைகுழி அதுவே  

நிலைத்து நிற்கும் நிம்மதி இல்லை  

நெஞ்சம் வெறுக்கும் நித்தம் நித்தம்  


சட்டம் இருக்கு சாட்சி இருக்கு  

சிறைச்சாலை உண்டு சிதைவும் உண்டு  

கடத்தி வந்தால் காலம் முழுதும்  

கம்பி எண்ணும் கதியே வருமே  


பள்ளி ஆசிரியர் பக்கம் நில்லுங்கள்  

பாசம் காட்டி பாதை காட்டுங்கள்  

பெற்றோர் பிள்ளை பேசி இருங்கள்  

பிரிவை விட்டு பிணைந்து வாழுங்கள்  


விளையாட்டு உண்டு விவேகம் உண்டு  

விடியல் தரும் வித்தை பல உண்டு  

புத்தகம் படித்து புலமை பெறுங்கள்  

போதையை விட்டு பொன்னாய் வாழுங்கள்  


மருத்துவம் உண்டு மனநலம் காக்க  

மறுவாழ்வு உண்டு மாறி வருவோர்கு  

கைவிடாதீர் கண்ணீர் வடிக்காதீர்  

காப்போம் என்று கைகொடுப்போம்  


சமூகம் ஒன்றாய் சபதம் எடுப்போம்  

சாதனை செய்வோம் சரித்திரம் ஆவோம்  

போதை இல்லா பூமி படைப்போம்  

புன்னகை மலரும் பூங்கா செய்வோம்  


அரசு முழங்கும் அறிக்கை தருமே  

ஆயிரம் திட்டம் அணிவகுக்குமே  

நாமும் துணைநிற்போம் நாட்டை காப்போம்  

நல்லவை நாட்டில் நடத்தி காட்டுவோம்  


வேண்டாம் வேண்டாம் விஷமே வேண்டாம்  

வாழ்வை வீணாய் விரயம் செய்யாதே  

உழைத்து உண்போம் உயர்ந்து நிற்போம்  

உலகம் போற்ற உண்மையில் வாழ்வோம்


ஜூன் இருபத்தாறு ஜொலிக்கும் நாளில்  

ஜாதி மதம் மறந்து நிற்போம்  

போதை ஒழிப்போம் பொன்னுலகு காண்போம்  

புதிய பாரதம் படைத்து வாழ்வோம்


--


கனவு இந்தியா


உழைப்பால் உயரும் உன்னத பாரதம்

உலகை ஆளும் உறுதி கொண்டதே

வேளாண்மை தொழில் விஞ்ஞானம் சேர்ந்து

வளமை பெருக வழிநடத்துமே


எல்லை காக்கும் எஃகு படைகள்

இறையாண்மை என்றும் இமைப்போல் காப்பர் 

ஒற்றுமை கொண்டு ஓங்கி நிற்போம்

ஒரே நாடாய் ஒளிர்ந்திடுவோமே.


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

news

15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்

news

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்