வாய்மை சொல் தவறிடேல்

Su.tha Arivalagan
Jun 12, 2026,04:58 PM IST

- முனைவர் கோ.லதா


வாய்மை என்னும் விளக்கினை ஏற்றிடு நெஞ்சே

பொய்மை இருளை போக்கிடும் தூய்மையே பேசே

சொல்லின் சுமை தான் செயலின் வித்தென்று உணர்ந்து

நல்லதை நாடி நடந்திடு வாழ்வில்


வாய்மை சொல் தவறிடேல் வானோரும் மெச்சுவர்

தீமை வரினும் திண்மையாய் நில்லென்று செப்புவர்

ஒருசொல் கொண்டே உலகம் போற்றிடும் புகழே

பொருளும் புகழும் பொய்யினால் வாராது 


கள்ளம் கபடம் கருதாது வாழ்வாய்

உள்ளம் தெளிந்து உரைத்திடும் வார்த்தை 

அன்னை சொன்ன அறநெறி கேளாய்

முன்னோர் வழியில் முழுமையாய் நடப்பாய்


வாய்மையே வெல்லும் வையத்து நீதி 

தாய்மையாய் தழைக்கும் தர்மத்தின் வேதி

நாவினில் நன்மை நாட்டிடு மகனே

பாவினை வெல்லும் பண்பினை ஏற்றே


--


மண்ணின் மைந்தன்


மண்ணில் பிறந்த மைந்தனே நீயே

விண்ணின் வரம்போல் விளைச்சல் தந்தாய்

உழுது விதைத்து உயிரைக் கொடுத்து

பழுதில்லா பயிரைப் பாதுகாத்தாய்


வியர்வை சிந்தி விளைவித்த நெல்லே 

அவிர்வாய் வாழும் அகிலத்தின் நம்பிக்கை

வெயிலும் மழையும் வேதனை எனினும்

பயிரைப் போல பண்புடன் வாழ்வாய்


மண்ணின் மணத்தை மறவாத நெஞ்சே

உன்னதம் நாடி உழைத்திடு தினமே

தன்னலம் வென்று தர்மத்தில் நின்றால்

என்றும் நிலைக்கும் இவ்வுலகின் புகழே


--


விதை நிலம் காத்திடு 




விதையெடுத்து நிலமுழுதும் தூவிடுவோம் தோழா

வேரூன்றி வளர்ந்திடவே வான்மழை வேண்டும்

களைகட்டி கல்லெடுத்து மண்ணினைத் திருத்தி

காத்திடுவோம் உழைப்பினால் கருணையின் வித்தை 


நீர்ப்பாய்ச்சி நிழல் தந்து நோயினை விரட்டி

நெஞ்சுரமாய் காவலிருப்போம் நாளும் நாளும் 

புழு பூச்சி வராமல் புனிதமாய் காப்போம்

பொறுமையோடு காத்திருந்தால் பொன்னறுவை வரும் 


விதைநிலம் தாய்மடிபோல் வாழ்வளிக்கும் செல்வம் 

வீணாக்கி அழித்திடின் வீழ்ந்திடுமே ஊரும்

மண்ணின் மடி காத்திடில் மழைபோல் செழிக்கும்

மானுடமும் வாழ்ந்திடுமே மகிழ்ச்சியின் நாட்டில்  


உழுதவன் வியர்வையிது உண்மையின் சாட்சி

உணவளிக்கும் கரமிதுவே உயர்ந்திடும் பேறு 

விதைத்தவன் தூங்கிடும் விளைச்சல் கருதிடுவோம் 

விழித்திருந்து காத்திடுவோம் விதியினை மாற்ற


செழிப்பெனும் பயிர்வளர சேர்த்திடுவோம் நேசம்  

சிறுபிள்ளை போலவே சீராட்டி வளர்ப்போம் 

நிலமெனும் நம்பிக்கை நெஞ்சினில் வைத்து 

நாளைக்கு நல்லறுவை நாட்டிடுவோம் நாமே


விதைநிலம் காத்திடில் வாழ்வெலாம் வாழும் 

வறுமையின் நிழல்கூட வாசலில் தங்காது 

கரம்கோர்த்து உழைத்திடுவோம் காலத்தின் காவல்

காத்திடுவோம் விதை நிலத்தை கண்ணின் மணிபோல்


--


தந்தையின் தியாகம்


வியர்வையை சிந்தி வாழ்வை வளர்த்தார்

விழிமூடி உறங்கா விழிப்புடன் நின்றார்

குடும்பம் சிரிக்க குறையினை ஏற்றார் 

குனிந்தே உழைத்தார் குறைசொலா மனத்தார்  


பசிதனை மறைத்து பிள்ளைக்கு ஊட்டினார் 

பழுதுறும் தோளினை பாரமாய் தாங்கினார் 

தன்சுகம் துறந்து தனயனை வளர்த்தார் 

தந்தையின் தியாகம் தரணியில் உயர்ந்ததே 


--


ஜூன் 12 சிறப்பு தின கவிதை


ஜூன் மாதம் பன்னிரண்டு சிறப்பு நாளாம்,  

சிறுவர்காய் எழுந்த குரலின் வாளாம்.  

தொழிலாளர் சங்கிலி தகர்கும் நாளாம்,  

தொலைத்த குழந்தைமை மீட்கும் வேளாம்.  


பள்ளிச் சுமை சுமக்க பிறந்தவர் அல்லர்,  

பாட்டும் விளையாட்டும் பழகிடும் நல்லர்.  

பசியும் ஏக்கமும் பாவை அழியட்டும்,  

பாதுகாப்பில் சிரிக்க பார்வை திறக்கட்டும்.  


அன்னே பிராங்க் பிறந்த நாளின் ஒளியே,  

அறிவின் வாசல் திறக்கும் அருளின் வழியே.  

பிலிப்பைன்ஸ் விடுதலை பாடும் நாளும்,  

பிஞ்சு நெஞ்சின் சுதந்திரம் பேணும் காலும்.  


கர்தரால் வரும் சுதந்திரம் குழந்தைதான்,  

கையில் புத்தகம் ஏந்திடும் தெய்வத்தான்.  

நடக்க வேண்டிய வழியினில் நடத்துவார்,  

நல்ல ஞானம் தந்து நாளும் காப்பார்.  


ஒடுக்கும் கரங்கள் ஓடி ஒளியட்டும்,  

ஓங்கும் வலியின் நுகம் உடைந்து போகட்டும்.  

தலையில் அக்கினி இறங்கி தெளிவாகட்டும்,  

தரணியில் பிள்ளைகள் தன்னிகர் இல்லாதாகட்டும்.  


கல்வி பொன்னினும் மேலாம் கருவூலம்,  

கண்ணீர் துடைக்க வருமே இறையருளம்.  

ஜூன் பன்னிரண்டு சொல்லும் சத்தியமே,  

சிறுவரின் நல்வாழ்வே சர்வ ஜெயமே.


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)