Dr Latha Poems: புறம் பேசுதல் வேண்டாம்!

Su.tha Arivalagan
May 12, 2026,02:59 PM IST

- முனைவர் கோ. லதா


புறம் பேசுதல் வேண்டாம் நண்பா

புண்ணியம் எல்லாம் போய் விடும் 

ஒருவர் குற்றம் பேசி வாழ்வது 

ஒழுக்கம் அல்ல வாழ்வு அல்ல 


நாவால் சுட்ட வடு ஆறாது 

நெஞ்சில் பாய்ந்த அம்பு போலே 

புறம் பேசி புகழ் தேடாதே 

புண்ணியம் கெட்டு பால் ஆவாய் 


உன்னை நீயேசீர் தூக்கிப் பார்

உன்னில் குற்றம் இல்லையோ

மற்றவர் குறை பேசும் முன்னே

மனதை செம்மை செய்து கொள்


புறம் பேசாத நாவு பெரியது

புனிதம் நிறைந்த வாய் பெரியது 

அமைதி கொண்டு வாழ்ந்தால் போதும்

அன்பு ஒன்றே அறம் ஆகும்


-


பீடுடன் வாழ்வு கொள்


 


பீடுடன் வாழ்வு கொள்ள வேண்டும்

பெருமை தன்னை பேண வேண்டும்

தாழ்வு கண்டு தளர்ந்து போகாதே

தன்மானம் கொண்டு எழுந்து நில்லு


உழைப்பு ஒன்றே உயர்வு தரும்

உண்மை ஒன்றே உறுதி ஆகும்

பொய்மை பேசி புகழ் சேர்க்காதே

பொறுமை கொண்டு புகழ்சேர் நீ 


இடுக்கண் வரினும் இறங்கி போகாதே

இன்னல் கண்டே இளகி போகாதே

நெஞ்சம் உறுதி கொண்ட மனிதன்

நிலத்தில் தலை நிமிர்ந்து வாழ்வான்


பீடுடன் வாழும் பெருமை கொண்டால்

பேரும் புகழும் தானே வரும்

வாழ்க்கை ஒருமுறை வாழும் வாழ்வு

வீரம் கொண்டு வாழ்ந்து காட்டு


-


நிழலும் நிஜமும்...


நிழல் போல வாழ்வு ஓடும்

நிஜம் தேடி மனம் ஓடும் 

காலம் காட்டும் பொய்மை எல்லாம்

கண்ணில் காணும் காட்சி அல்ல


உண்மை ஒன்றே நிலைக்கும் என்று

உள்ளம் சொல்லும் உரக்க ஒலி 

நிழல் போனாலும் நிஜம் தங்கும்

நீதி வெல்லும் காலம் வரும்


ஆசை மேகம் மறைத்த கண்ணில்

அறிவு விளக்கு ஏற்ற வேண்டும்

பொய்மை வாழ்வு பனிபோல் மறையும்

புண்ணியம் ஒன்றே பூத்து நிற்கும்


நிழலை நம்பி வாழ்ந்தோ ரெல்லாம் 

நிஜம் கண்டே தோற்றுப் போவார்

நிஜம் அறிந்து வாழ்ந்தோர் என்றும்

நிழலாய் ஒளிர்ந்து வாழ்வாரே 


--


பெருமைக்குப் பொய் சொல்லேல்...


பெருமைக்காகப் பொய்யைச் சொல்லி

பேச்சின் விலை உயிரே ஆகும்

உண்மை ஒன்றே உயர்வு தரும்

உலகம் போற்றும் நெறியும் அதுவே


நாவின் சொல்லே விதை ஆகும்

நன்மை தீமை விளையும் அதில்

பொய்யின் நிழல் தற்காலிகம் 

புகழும் கரையும் கடல் அலைபோல் 


வெற்றி என்பது பொய்யால் அன்று

வீழ்ச்சி வருமே வஞ்சனையால்

மெய்யின் வழியே மேன்மை சேரும்

மேதினி நிற்கும் மாண்பு அதிலே


பெருமை வேண்டி உழைப்பால் தேடு

பொய்யால் அன்று பெருமை கொள்ளேல்

உள்ளம் தெளிந்து உண்மை காத்தால்

உலகம் முழுதும் உன்னை போற்றும்


-


வதந்தி...


வதந்தி பரவும் மனிதர் வாயில்

வாயில் செல்லும் வார்த்தை நெருப்பாய்

நெருப்பாய் எரியும் உறவின் பாலம்

பாலம் உடையும் நம்பிக்கை இல்லாமல்


இல்லாமல் போகும் அமைதி வாழ்வில்

வாழ்வில் நிம்மதி கொடுக்கும் வதந்தி

வதந்தி கேட்கும் முன் ஆராய்

ஆராய் உண்மையை பேசு உண்மை.


உண்மை வெல்லும் பொய்யைத் தாண்டி

தாண்டி நிற்கும் நல்லோர் மனம்

மனம் குளிரும் அன்பு நிறைந்தால்

நிறைந்தால் அழியும் வதந்தி நிழல்


--


பைந்தமிழ் போற்றிடு


பைந்தமிழ் போற்றிடு பண்பாய் வாழ்வில்

பாவலர் பாடிய பாடல் இனிமை

சங்கம் வளர்த்த தமிழின் சிறப்பை

சந்தம் முழங்கும் தரணி அறியும்


இலக்கணம் கொண்ட இனிய மொழியே

இலக்கியம் ஆயிரம் ஏற்றம் கொண்டது

தொல்காப்பியம் சொன்ன தொன்மை போற்றி

தூய்மை கொண்டே தமிழை ஏற்றி


வள்ளுவம் வாழும் வாழ்க்கை நெறியாய்

வளமை தருமே வார்த்தை ஒவ்வொன்றும்

சிலப்பதிகாரம் சீர்மை பேசும்

செந்தமிழ் நாடு செழுமை கொண்டே


முப்பால் அறமும் முழங்கும் மண்ணில்

முன்னோர் வாழ்த்தும் மொழியை காப்போம்

பைந்தமிழ் போற்றி பரவசம் கொள்வோம்

பாரெங்கும் ஒலிக்க பாடி நிற்போம்


--


மனிதத்தை தேடி


மனிதத்தை தேடி மண்ணில் அலைந்தேன்

மாண்பு மறைந்த மாந்தர் கூட்டம்

அன்பு சொல்லும் அகமும் காணேன்

அறம் பேசும் வாயில் பொய்யே


கருணை பற்றிய கண்கள் காண்கிறேன்

கடமை மறந்த காலம் வாழ்கிறேன்

பகிர்ந்து உண்ணும் பண்பு இல்லாமல்

பணத்தின் பின்னே பதுங்கும் மனிதர்


உதவி செய்யும்

உள்ளம் ஒன்றை

உலகம் முழுதும்

உற்று தேடினேன்

மனிதம் மீண்டும்

மலரும் என்றால்

மனிதன் மனிதன் ஆகும் நாளே


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)