பூ அல்ல பாவை.. சிவப்பில் மலரும் மனிதம்!
- முனைவர்.கோ.லதா
பூ அல்ல பாவை பொன்னை நிகர்ப்பாள்
நிலவும் அல்லள் நெஞ்சில் உறுதி
மலரும் அல்லள் மனதில் திண்மை
பாறையைப் போல பண்பில் நிற்பாள்
கண்ணீர் சிந்தி கரைவதில்லை
கனவை மட்டும் கைகளில் சுமப்பாள்
விழியில் நெருப்பு வீரம் மிளிரும்
விதியை வெல்லும் வேள்வி செய்வாள்
எண்ணம் உறுதி இடரை உடைப்பாள்
இலக்கை நோக்கி இமைக்காது செல்வாள்
தளர்வை அறியாள் தடையைத் தகர்பாள்
தன்னம்பிக்கை தாரகை ஆவாள்
சொல்லில் வலிமை செயலில் தெளிவு
சோர்வு தொடாது சுடராய் எழுவாள்
கடமை ஒன்றே கணக்காய்க் கொள்வாள்
காலம் வென்றே கடினம் புரிவாள்
பெண்மை என்றே பேதை என்றார்
பேதை அல்லள் பேராற்றல் உடையாள்
நாடு காக்கும் நல்ல திறத்தாள்
நாளும் உழைக்கும் நற்றவப் பெண்ணாள்
வானம் தொடவே வழியை வகுப்பாள்
வாழ்வை வெல்லும் வன்மை கொண்டாள்
பூவைத் தேடாப் பூமகள் இவளே
போற்றும் உலகின் புனித பாவையே
--
சிவப்பில் மலரும் மனிதம்
சிவப்பில் மலரும் மனிதம் இங்கே
சிரிப்பில் விளையும் சிறந்த தானம்
ரத்தம் தருவோம் ரத்தம் காப்போம்
உயிரை மீட்கும் உன்னதப் பண்பே
நரம்பில் ஓடும் நல்லமுது இது
நாளை நமக்கும் நாளையார்கும்
விலை பேசாத விழுமிய கொடை
விண்ணும் போற்றும் வீரச் செயலே
மருத்துவர் கேட்க மறுப்பதேனோ
மற்றவர் வாழ்வு மரணப் போரில்
தாயின் வயிற்றில் தவிக்கும் சேய்கு
தானாய் வருமோ தாயின் குருதி
ஒரு சொட்டு ரத்தம் ஒருவர் வாழ்வு
ஒரு மணி நேரம் உயிரின் பரிசு
அஞ்சி ஒதுங்க அறியாமை ஆகும்
அன்பின் வடிவம் அடுத்தவர் நலமே
இனம் மதம் என்று இங்கில்லை பேதம்
இரத்தம் ஒன்றே இரக்கம் ஒன்றே
கொடுக்க குறையாது கொள்கை வளரும்
குன்றாது நிற்கும் குணத்தின் உயர்வு
ஆண்டுக்கு மும்முறை அளித்திடு தானம்
ஆரோக்கியம் உனக்கு அவனுக்கு வாழ்வு
சிவப்பில் மலர்ந்த சிறந்த மனிதம்
செழிக்க வைப்போம் செய்வோம் தானம்
--
வேற்றுமை அகற்றிடு
சாதி என்னும் சுவரை உடைப்போம்
சண்டை இடும் சொல்லை விலக்குவோம்
மதம் என்று மனிதம் பிரிக்காதே
மனித நேயம் மாசின்றி காப்போம்
ஏழை பணக்காரன் என்றே பிரியாதே
எல்லாரும் ஒரு குலம் என்றுணர்வோம்
நிறம் என்னும் நஞ்சை நீக்குவோம்
நெஞ்சில் அன்பின் நிழலை வளர்போம்
மொழி வேறு என்று முரண்பட வேண்டாம்
முழு உலகும் முத்தமிழர் குடியே
ஆண் பெண் என்று அடிமை கொள்ளாதே
அனைவரும் சமம் என்று ஆள்வோம்
ஊரின் பெயரால் உயர்வு தாழ்வில்லை
உள்ளம் ஒன்றானால் உறவும் ஒன்றே
பகை என்று பார்வை விரிக்காதே
பாசம் என்ற பாலம் அமைப்போம்
வேற்றுமை வேரோடு வேரறுப்போம்
விழுமியம் காத்து விளங்கிடுவோம்
ஒற்றுமை என்ற ஒளியை ஏற்போம்
ஒரு தாய் மக்கள் ஒருமித்து வாழ்வோம்
நாடு என்னும் நந்தவனம் செழிக்க
நல்லிணக்கம் என்னும் நீரை பாய்சுவோம்
வேற்றுமை அகற்றி வாழ்தல் வரமே
வையம் போற்ற வாழ்ந்திடுவோமே
தாயின் மடியே தவமெனும் கோயில்
தந்தை போலே தாங்கிடும் மழையே
உடன்பிறப்பு உயிரின் பாதியே
உறவினும் சோலை உள்ளம் நிறையே
பாட்டி கதையோ பழமையும் ஓவியம்
தாத்தன் சொல்லோ தரணியில் வேதம்
மாமன் அன்பு மழையெனும் தாலாட்டு
மைத்துனன் பாசம் மலரெனும் பூத்தே
பேரன் சிரிப்போ பெருமையின் மூச்சே
உறவைப் போற்றி உலகம் வாழ்ந்தால்
உயிரோவியமாய் உலாவிடும் இன்பம்..
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)