- முனைவர் கோ.லதா
தீதறு தெளிவு கொள் மனமே நீயே,
தீமை நீங்கி தெள்ளிய சிந்தை பெறுவாய்.
அறிவின் விளக்கை அகத்தில் ஏற்று,
அஞ்ஞான இருளை அகற்றி விடு.
கர்த்தரின் வார்த்தை கண்ணாடி ஆகும்,
கோணல் எண்ணம் குற்றம் இல்லாதாகும்.
பொய்யின் புகை போய் மறையட்டும்,
பொல்லாங்கு செயல் புதைந்து போகட்டும்.
ஞானம் என்னும் ஞாலம் நிறைந்திட,
ஞாலம் போற்றும் நல்வழி திறந்திட.
சினமும் பொறாமை சிதைந்து விழட்டும்,
சிந்தை தெளிந்து செம்மை வரட்டும்.
உள்ளம் கலங்க உறவு பிரியாது,
உண்மை உரைத்து உரிமை நிலைக்கும்.
பிழை எனில் பொறுத்து பெருமை கொள்ளாதே,
பிறர் நலம் காண பெருந்தன்மை கொள்வாய்.
தெளிந்த நீர்போல் தெளிவு கொள்வாய்,
தெய்வ பயத்தில் திண்மை பெறுவாய்.
கள்ளம் கபடம் கரைந்து போகட்டும்,
கனிந்த அன்பே காலம் வெல்லட்டும்.
ஏற்றம் தரும் எண்ணம் வளர்க,
ஏழ்மை நினைவும் எழுந்து மறையட்டும்.
தீதறு தெளிவு தினமும் காப்பாய்,
தீர்க தரிசனம் தினைத்துணை பெறுவாய்.
--
செய்வது துணிந்து செய்

செய்வது துணிந்து செய்மைந்தா நீயே
சிந்தை முழுதும் செயலில் வைப்பாய்
அச்சம் விடுத்து அரும்பணி ஆற்று
அயர்வு இல்லாது அடிமேல் அடிவை
தொடங்கிய செயலை தொய்வின்றி முடி
தோல்வி வந்தாலும் துவளாமல் நில்லு
முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்தால்
முடியாதது என்று முடிவே இல்லை
கல்வி ஆயினும் கடமை ஆயினும்
கடின உழைப்பே கரையேற்றும் காண்
பாதி மனதுடன் பணி செய்யாதே
பாரம் பொறுத்து பயிர் செய்வாய்
உயர்நிலை எய்த உள்ளம் துணிந்திடு
உன்னதம் நோக்கி உந்தி எழுவாய்
செய்வது துணிந்து செய் இன்றே
செங்கோல் போல சிறந்து வாழ்வாய்
--
ஜூன் 13 சிறப்பு தினக் கவிதை
ஜூன் மாதம் பிறந்ததோர் நன்நாள் காண்,
ஜூன் பதின்மூன்று சிறப்புறு நாளே.
அல்பினிசம் என்னும் நிலையின் விழிப்பு,
அன்பால் அரவணை அனைவரையும் காண்.
நிறமி குறைவு என்று நகைக்காதே,
நீதி நெறியால் நேசித்திடுவாய்.
தேவ சாயலில் தோன்றிய உயிரே,
தீண்டாமை இன்றி தழுவிடுவாய்.
மூட நம்பிக்கை முற்றும் ஒழிக,
மனித நேயம் மண்ணில் மலர்க.
வேற்றுமை பாராது வாழ்வோம் நாம்,
விழிப்புணர்வு கொண்டு வெல்வோம் இன்றே.
தோலினை காத்து துணிவுடன் வாழ்க,
தொல்லை விலக்கி உரிமை கேட்பாய்.
சமத்துவம் வேண்டும் சாதி இல்லை,
சரிநிகர் சமாய் சமூகம் சிறக்க.
ஜக்லிங் தினமும் ஜூன் பதின்மூன்று,
ஜாலம் புரிந்து மகிழ்சி பெருக.
திறமை பயின்று திகழ்வாய் நீயும்,
தினமும் முயன்று உயர்நிலை எய்து.
நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க,
நல்லோர் குணத்தால் நாடு போற்றும்.
ஜூன் பதின்மூன்று ஜொலிக்கும் நாளில்,
ஜீவ கருணை ஜெயிக்கட்டும் வையம்.
--
தந்தைக்கு நிகர் தரணியில் உண்டோ
தரணியில் தந்தை தன்னிகர் இல்லை,
தாங்கும் கரங்கள் தளர்வற நின்றான்.
உழைத்து உருக்கி உயிரினை ஈந்தான்,
உறக்கம் துறந்து உயர்வினை தந்தான்.
வெயிலில் காய்ந்து விதையினை விதைத்தான்,
வியர்வை விளைச்சல் வாழ்வினை ஆக்கினான்.
பசியென வந்தால் பகிர்ந்து கொடுத்தான்,
பட்டினி கிடந்தும் பிள்ளை பசியாற்றினான்.
நிழலென தொடர்ந்து நெஞ்சில் சுமந்தான்,
நேர்மை நெறியை நெஞ்சில் ஊட்டினான்.
கல்வி கற்று காலூன்ற சொன்னான்,
கடமை செய்து கடலென நின்றான்.
தடுமாறும் போது தாங்கியே நிற்பான்,
தவறு செய்தால் திருத்தியே வைப்பான்.
அன்பில் தோய்ந்து அரவணைத்து வைப்பான்,
அச்சம் வந்தால் அரணென மாறுவான்.
கடன்பட்டு கூட கல்விக்கு ஈந்தான்,
கண்ணீர் மறைத்து கனவுகள் தந்தான்.
நோய்வந்த போதும் நொடித்திட மாட்டான்,
நொந்துபோய் நின்றால் நெஞ்சில் தாங்குவான்.
தந்தையின் நிழல் தரணிக்கு வேண்டும்,
தன்னலம் இன்றி தர்மமே செய்வான்.
எந்நாளும் அவன் எமக்கொளி விளக்கு,
எங்கும் நிகராம் தந்தையே தெய்வம்.
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
வானவில் என்னும் மாயவில்
என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
காற்று
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
{{comments.comment}}