- முனைவர் தி. தங்கலட்சுமி
புத்தகத்தின் பெயர் : திட்டம் 6
புத்தக வகைமை : நாவல்
நூலாசிரியர் : சோம வள்ளியப்பன்
ஸ்நேகா வெளியீடு, சென்னை
பக்கங்கள் : 178
விலை : ரூ.250/-
"திட்டம் 6" 'திகைப்பை ஏற்படுத்தும் அறிவியல் யுகத்தின் முக்கியமான சந்திப்பில் நின்று பேசும் நாவல்' என்று புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருந்தே எதைப்பற்றிய கதையாக இருக்கும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
பத்து அத்தியாயங்கள் கொண்ட நாவல்... எடுத்த எடுப்பிலேயே நேராகக் கதைக்குள் நம்மை கை பற்றி அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். பக்கங்கள் ஒவ்வொன்றும் மிக விரைவாக நகர்ந்து செல்லும்வண்ணம் மிகவும் சுவாரஸ்யமாக கதை நம்மைக் கைப்பற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது.
இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சபட்சமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் காலத்தில்
உலகின் இயக்கங்களையும் மனிதர்களின் செயல்பாடுகள் பற்றியெல்லாம், தெய்வங்களின் உலகில் நடைபெறும் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் வாசகர்களாகிய நம்மையும் ஒரு பார்வையாளர்களாக அமர்த்தி விடுகிறார் ஆசிரியர்.

ஒரு பெருநிறுவனத்தின் மாதாந்திர குறைநிறைகளை அலசி ஆராயும் ஒரு நிர்வாக மேலாண்மைக் கூட்டத்தில், எவ்வாறு உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் கூடுகை நிகழுமோ, அதுபோல தெய்வங்களின் உலகில் மும்மூர்த்திகளின் முன்னிலையில் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கடவுளர்கள் பூமியில் நிகழ்த்தும் சோதனை முயற்சியான ஆறாம் அறிவின் விளைவுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைப் பற்றிய கலந்தாலோசனைக் கூட்டமாக "திட்டம் 6" அமைந்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூமியில் ஆதியில் இருந்து தற்போது வரை நிகழ்ந்துள்ள உணர்வுகள் மற்றும் அறிவு சார்ந்து நிகழ்ந்துள்ள அனைத்து வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி அலசி ஆராய்கிறார்கள்.
ஆசிரியர் இக்கதையில் பலதரப்பட்ட தரவுகளையும் மிகவும் நுட்பமாக தனது கதாப்பாத்திரங்கள் வாயிலாக பட்டியலிட்டுத் தந்துள்ளார். மனிதகுலத் தோற்றத்தில் துவங்கி இன்றைய நவீன யுக பண்பாடு,
மரபுகள் மற்றும் மரபு மீறல்கள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் மிகவும் சுவைபட விளக்கிச் செல்கிறார்.
இனிவரும் காலங்களில் மனிதகுலத்திற்கு என்ன நேருமோ... என்று மும்மூர்த்திகளும் சற்றே பதைபதைப்பது போன்றும் இந்தத் திட்டம் 6 இனியும் தொடருமா? அல்லது முற்றுப்பெறுமா? பரிசோதனை முயற்சி வெற்றியா? அல்லது தோல்வியா? என்பன போன்ற கேள்விகள் நிறைந்த திருப்புமுனைகள் கொண்டு நாவல் நகர்கிறது.
ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இனி எதிர்காலத்தில் என்னவெல்லாம் நேரும் என்பன பற்றியும் ஆலோசனைக் கூட்டத்தில் அலசி ஆராய்கிறார்கள். அதனால் ஏற்படும் சாதக பாதக விளைவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆசிரியர் சுவைபட எழுதியுள்ளார். கதாப்பாத்திரங்களாக கடவுளர்கள் வருகிறார்கள். அவர்களின் பெயர்களை இன்றைய காலத்திற்கு ஏற்ப சுருக்கப் பெயராகக் கொடுத்திருப்பது கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது எனலாம்.
மேலும் தற்காலத்தின் பெருநிறுவனங்களின் ஆய்வுக் கூட்டங்களில் நிகழ்வது போன்ற பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் போன்ற வழிமுறையே தேவர் உலகின் கூட்டத்திலும் நிகழ்த்தப்படுவதாகக் காட்சிப்படுத்தி அங்கும் நவீனம் எங்கும் புதுமை என நிறைய உத்திகளை மேற்கொண்டுள்ளார் ஆசிரியர்.
இந்தப் புத்தகத்தில் ஆசிரியரின் என்னுரை மற்றும் அணிந்துரைகூட புதுமையான விதத்தில் புத்தகத்தின் ஆரம்பத்தில் அமையாது, பத்து சுவையான அத்தியாயங்கள் நிறைவடைந்த பின்னரே இடம்பெற்றுள்ளது. திரு. பாவண்ணன் மற்றும் திரு.சு. வேணுகோபால் ஆகியோரின் அருமையான அணிந்துரை இடம்பெற்றுள்ளது.
மொத்தத்தில் இந்த "திட்டம் 6" நிறைய புள்ளிவிபரத் தகவல்களோடு வருங்காலம் குறித்த கவலைகளை வெளியிடுகிறது. அதேவேளையில் அக்கவலை தீர வழிவகையும் கூறுகிறது. இன்னும் கொஞ்ச நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நீளாதா...?! அதற்குள்ளாக முடிந்துவிட்டதே என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அத்தனை சுவைபட கடவுளர்களின் உரையாடல்கள் அமைந்துள்ளன.
ஆசிரியர் சோம வள்ளியப்பன் அவர்கள் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் ஏராளமான நிதி மேலாண்மை சார்ந்த 90க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதி உள்ளார். ஒரு குறுநாவல் மற்றும் ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார். 'திட்டம் 6' இவருடைய முதல் நாவல்.
(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
மெய்நட்பு!
பழி சொல்லாத நிழல் நீ .. நட்பு!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
வாசித்த இதயத்தில் யாசிக்க வந்த வரிகள் நீ
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
நிழலாக நீயும் நிசமாக நானும்!
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
{{comments.comment}}