புரட்டாசி மாதம் பிறந்தாச்சுன்னாலே தமிழ்நாட்டு வீடுகளில் இருக்கும் அசைவ பிரியர்களுக்கு நமநமக்க ஆரம்பிச்சிடும்.. போச்சுடா இந்த மாசம் முழுக்க நான்வெஜ் கிடையாதா என்று சிலர் அங்கலாய்ப்பார்கள்... "எடு செருப்பை! புரட்டாசியும் அதுவுமா என்ன கறி மீனுன்னு பேச்சு வேண்டி கிடக்கு? வீட்ல ஒரு வெங்காயம், பூண்டு கூட அறுக்கக் கூடாது!" அப்படின்னு அம்மாவும், "ஏங்க, இந்த ஒரு மாசம் ஒழுங்கா விரதம் இருந்தா என்னவாம்?" அப்படின்னு மனைவியும் போடும் சட்டம் இருக்கே... அது அக்னி நட்சத்திரத்தை விட கொடூரமானது!
சரி, வீட்டுக்குள்ள தான் சாப்பிட முடியாது, வெளியே போய் ரகசியமா ஒரு புடி பிடிச்சிட்டு வரலாமேன்னு பிளான் போட்ட நம்ம 'அசைவப் போராட்ட தியாகி'.. அதாங்க நம்ம ஹீரோவின் சோகக் கதையைப் பார்ப்போம் வாங்க மக்களே
Operation 'சிக்கன் பிரியாணி'!
சண்டே மதியம். வயிற்றுக்குள் 'சிக்கன்... சிக்கன்...' என்று ஒரு கூக்குரலிடுகிறது. வீட்ல பார்த்தா பருப்பு உசிலியும், தக்காளி ரசமும் தத்தமது பாத்திரங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கு. சுந்தரத்துக்கு தாங்கலை. நண்பன் கார்த்திக்கு போன் போட்டு, "மச்சி... ஹோட்டல் எல்லை அம்மன் வாசல்ல வெயிட் பண்ணு, 10 நிமிஷத்துல வர்றேன்.. வயிறு கவ்வுதுடா.. முடியலை" அப்படின்னு ரகசிய கமாண்டோ ஸ்டைல்ல மெசேஜ் அனுப்புறான்.

கார்த்தி அதுக்கு மேல அலைபாய்ந்து கொண்டிருந்தான்.. " நீ வா மச்சான்.. நானும் உடனே வந்துர்ரேன்" என்று அவன் பதிலைக் கொடுக்க.. இரண்டு பேரும் அடித்துப் பிடித்து ஹோட்டல் வாசலில் போய் விழுந்து எழுந்தனர்.
"அண்ணே! 2 சிக்கன் பிரியாணி, ரெண்டு 65, அப்படியே 2 கலக்கி.. ஃபாஸ்ட்டா!" அப்படின்னு ஆர்டர் பண்ணி, கண்ணை மூடிக்கிட்டு ஒவ்வொரு கவளமா அமுதத்தை சாப்பிடுற மாதிரி சாப்பிட்டு முடிச்சாங்க ரெண்டே பேரும்.
வெளியே வந்தபோது உலகமே பளிச்சென்று துடைத்து எடுத்தது போல சூப்பராக காட்சி அளித்தது.. "என்னதான் சொல்லு மாப்ளே.. சிக்கன் சிக்கன்தாண்டா" என்று இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர்.
ஆனால் அடுத்தது தான் ஆட்டமே இருக்கு!
சாப்பிட்டு முடிச்ச உடனே தான் அசைவ பிரியர்களுக்கு உண்மையான சவாலே ஆரம்பிக்கும்.. வயிறு நிறைஞ்சிருச்சு. ஆனால் வாய்தான் வாசமாப் போய்ருச்சே.. அதை இப்படி மறைக்கிறது!
சுந்தரமும், கார்த்தியும் கையில் எடுத்த அடுத்த ஆயுதம் "மிஷன்.. வாசம் ஒழிப்போம்.. சுவாசம் சுத்திகரிப்போம்"
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து கமுக்கமாக சிரித்தபடி, பாக்கெட்ல வச்சிருந்த ரெண்டு 'மின்ட்' சூயிங்கத்தை எடுத்துப் பிரித்து வாயில் போட்டனர்.
அடுத்து கை, விரல் இடுக்குகள், நகக்கண் எல்லாத்துலயும் பிரியாணி வாசம் போற வரைக்கும் சானிடைசரை ஊற்றி தேய் தேய்னு தேய்த்து எடுத்தனர்.
சுந்தரம் தன் கையை மூக்குக்கு அருகில் கொண்டு சென்று பார்த்துவிட்டு, "டேய் கார்த்தி, வாசம் இன்னும் லேசா வருதுடா..." என்று பீதியடைய, கார்த்தி தன் பாக்கெட்டிலிருந்து அடுத்து வெளியே எடுத்தது ஒரு குட்டி 'பாக்கெட் சென்ட்' புட்டியை!
"இது எதுக்கு மாப்ளே?" என்று சுந்தரம் கேட்க, "அட லூசு, கையிலயும் சட்டையிலயும் லைட்டா ஸ்ப்ரே பண்ணிக்கோ. வீட்டுக்குள்ள நுழைஞ்சா கமகமன்னு வாசம் வீசணும்" என்று சொல்லி இருவரும் ஆளுக்கொரு பாட்டில் சென்ட்டை மேலெல்லாம் அடித்துக் கொண்டனர்.
வீட்டுக்குக் கிளம்பும் போதுதான் அந்த விபரீதம் புரிந்தது! கார்த்தியின் அம்மா, "வீட்டுக்கு வரும்போது சாமிக்கு பூவும், பாலும் வாங்கிட்டு வாடா" என்று ஏற்கனவே மெசேஜ் அனுப்பியிருந்தார்.
"மச்சி... கடையில பூ வாங்கிட்டு வரும்போது, பிரியாணி பார்சல் வாங்கப்போற மாடல்ல முகத்தை வச்சுக்காத. அப்புறம் பூக்கடை அக்காவுக்கே சந்தேகம் வந்துரும்!" என்று சுந்தரம் எச்சரிக்க, இருவரும் பயபக்தியோடு பூவை வாங்கி பூக்கடை அக்காவிடம், "அக்கா, துளசி இருந்தா கொஞ்சமா வைங்கக்கா... பெருமாள் மாசம்ல!" என்று எக்ஸ்ட்ரா சீன் வேற போட்டார்கள்.
வீட்டு வாசற்படி வரை வந்தாச்சு. சுந்தரம் மெதுவாகக் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த மனைவி, இவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "என்னங்க... வீடே மணக்குற அளவுக்கு சென்ட் அடிச்சிருக்கீங்க? அதுவும் போக கைல துளசி வாசம் வேற..." என்று சந்தேகக் கண் வைத்தாள்.
சுந்தரம் உடனே சுதாரித்துக் கொண்டு, "அது வந்துடி... புரட்டாசி மாசம் பிறந்திருச்சுல்ல, மனசு ஃபுல்லா பக்தி பரவசமாயிடுச்சு. அதான் பெருமாள் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு, துளசி பிரசாதம் வாங்கிட்டு வந்தேன்!" என்று மிகச் சிறந்த நடிகனுக்கான விருதை வாங்கும் அளவுக்கு வசனம் பேசினான்.
மனைவியும், "அப்படியா சங்கதி! சரி, கோயிலுக்குப் போயிட்டு வந்தீங்கள்ள... அப்படியே கை, காலைக் கழுவிட்டு வந்து இலை போடுங்க. சாமி கும்பிட்டுட்டு, சுடச்சுட ரசமும் பருப்பு துவையலும் சாப்பிடுங்க!" என்று சொல்ல...
அவ்வளவுதான்! வயிறு முட்ட பிரியாணியும், சிக்கன் 65-ம் சாப்பிட்டு வந்த சுந்தரத்துக்கு, "ஐயோ பெருமாளே!" என்று கதற வேண்டும் போல இருந்தது. 'பசிக்குதுன்னு பொய் சொல்லித் தப்ப முடியாது, கோயிலுக்குப் போனேன்னு சொன்ன வாய் சும்மா இருக்காம மாட்டிக்கிச்சே' என்று நொந்தபடியே, மீண்டும் ஒரு பிடி பருப்புச் சாதத்தைச் சாப்பிட வேண்டியதாயிற்று!
என்னதான் சாணக்கியத் தனமா பிளான் போட்டு அசைவம் சாப்பிட்டாலும், வீட்டுக்குள்ள வந்து 'பருப்புச் சாத தண்டனையை' அனுபவிக்காமல் தப்பிக்க முடியலைங்கறதுதான் நிதர்சனம்!
அப்புறம் மக்களே, இது முற்றிலும் ஒரு ஜாலியான கற்பனைக் கதைதான். நம்மில் பல பேர் நிஜ வாழ்க்கையிலயும் இந்த மாதிரி சின்னச் சின்ன சேட்டைகளைச் செய்து பார்த்திருப்போம்... ஸோ இதை வெறும் கதையா மட்டுமே பாருங்க.. சீரியஸா எடுத்துக்காதீங்க!
அவரவர் நம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும் அவரவருக்கு அழகு. மற்றவர்களின் நம்பிக்கையை எப்போதும் மதிப்போம்; எந்த மாசமா இருந்தாலும் சந்தோஷமா, ஜாலியா வரவேற்போமே!
அனைவருக்கும் இனிய ஹேப்பி புரட்டாசி மாத வாழ்த்துகள்.. ஒரு மாசத்துக்கு வாயைக் கட்டித்தான் பாருங்களேன்!
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
{{comments.comment}}