அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

Sep 18, 2026,12:45 PM IST

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள 'நட்சத்திர பேச்சாளர்கள்' (Star Campaigners) அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   


இந்த பட்டியலில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முதன்மை இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் தம்பிதுரை ஆகியோர் தேர்தல் பிரச்சாரப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


மேலும் பொள்ளாச்சி வி.ஜெயராமன், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர். காமராஜ், கோகுல இந்திரா, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பி. மோகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கட்சியின் முக்கிய முன்னணி தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்விகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. 




கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கிய தூணாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி மற்றும் வட தமிழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் சி.வி. சண்முகம் ஆகிய இரு முன்னணி தலைவர்கள் தவிர்க்கப்பட்டது கட்சிக்குள் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. காரணம், மதுராந்தகம் தொகுதியை பொருத்தவரை வன்னியர் சமூக ஓட்டுக்கள் அதிகம். அதே போல் தாராபுரம் தொகுதியில் கவுண்டர் சமூக வாக்குகள் அதிகம். இந்த இரண்டு சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், அது அதிமுக.,விற்கு பலவீனமாக அமைய வாய்ப்புள்ளது. 


கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இந்த சமூகங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி அளவிற்கு அவர்களுக்கு தொகுதியில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றே கருதப்படுகிறது. இடைத்தேர்தலிலும் அதிமுக.,வுக்குள் அதிருப்தி நிலை நிலவுவதால் இது தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தி, அது அதிமுக.,வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றே சொல்லப்படுகிறது.


வருகின்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு, இந்த நட்சத்திர பேச்சாளர்கள் மாநிலம் தழுவிய தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். முக்கியத் தலைவர்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பட்டியல் மூலம் கட்சியின் தேர்தல் கள வியூகம் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்