Short Story: சுருக்குப்பை

Su.tha Arivalagan
Sep 07, 2026,04:56 PM IST

- முனைவர் என்.பத்ரி

மீனு தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தையல் கடைக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடையில் உதவிக்கு செல்வாள். அதன் மூலம் சிறுகச் சிறுகச் சேர்த்த பணம்தான் அந்த 10000 ரூபாய். அதைத் தான் இப்போது காணவில்லை.

ஒரு தையல் எந்திரம் வாங்க வேண்டும் என்பது அவளுடைய கனவு.பத்தாம் வகுப்புடன் அவளுடைய படிப்புக்கு முற்றுப்புள்ளி வந்து விட்டது மீனுவின் அம்மா இறந்த பிறகு அவளின் ஒரே ஆறுதல் அவளுடைய பாட்டிதான்.

பாட்டியின் சுருக்குப்பையில் காசு இருக்காது என்ற நினைப்பு அவளுடைய அப்பாவுக்கு.அதனால் தான் அவள் தன்னுடைய பணத்தை அதில்  சேர்த்து வைத்திருந்தாள்.

‘நேற்றுக் கூட பார்த்தேனே? இப்போது காணவில்லையே?’ அதிர்ச்சியும், கவலையும் மீனுவை ஒரு சேர திட்டமிட்டுத் தாக்கின. மீனு தன் அழுகையை அடக்கிக் கொண்டாள்.

ஒவ்வொரு நாளாக கொஞ்ச, கொஞ்சமாகச் சேர்த்து வைத்த பணம் அப்பாவின் கண்ணில்பட்டு விட்டதோ? இதை அவரிடம் கேட்டால் அவளுக்கு அடி உதை நிச்சயம்.அதை வாங்கும் சக்தி அவளிடம் இல்லை. 

அன்று மாலை அவளுடைய அப்பாவிடம், ’ஒரு 50 ரூபாய் இருந்தால்  கொடுங்களேன்’ என்று அவள் கடனாகக்  கேட்டாள்.



இது ஒரு வகையில் போட்டு வாங்குவது தான். அவர் தன்னுடைய கையில் காசு எதுவும் இல்லை என்று சொன்னார். ’அது அவளுக்கு உண்மை’ என்று தொன்றியது. எனவே காசு இருந்த சுருக்குப்பை அவளுடைய குடிக்கார அப்பாகையில் சிக்கவில்லை என்பது  உறுதியாகியது.

எங்கேயோ பாதுகாப்பாக இருக்கிறது. அன்று இரவு 12 மணி வரை தேடி தேடி பார்த்தாள்.சுருக்குப் பை கிடைத்தபாடில்லை.

எப்போதும் பரபரப்பாக இருந்த அவளைப் பார்த்த அவளுடையப் பாட்டி   ஒரு  கட்டத்தில் பொறுமை  இழந்தாள். அவளின் முதுகில் ஒரு தட்டு தட்டு,’ அடியே கழுதை! எதைத் தான் தேடிட்டு இருக்க? சொல்லித் தொலையேன்’ என்றாள்.
’உன்னுடைய சுருக்குப் பையைத் தான்’ என்றாள் அவள்.

அதில் பணம் இருப்பதை அறிந்த அவளும் அதிர்ச்சியில் உறைந்தாள்.

 ’என்னடி சொல்கிறாய்? அது ரொம்ப பழசாகிவிட்டது.’ இன்று மாலையில் தான் நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டேன். சாரிம்மா’ என்றாள் இயல்பாக.

அவளைப் பொறுத்த வரை பாட்டியின் சுருக்குப்பைதான் அவளுடைய வங்கி லாக்கர். அந்த சுருக்குப்பை 
எப்பொழுதும் பாட்டியின் இடுப்பில்தான் இருக்கும்.இன்று இப்படியாகி விட்டதே?

இவளுடைய அப்பா முனியாண்டி ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இயந்திரத்தில் நாள் முழுவதும் நின்றுக் கொண்டே செய்யும் வேலையினால் அவருக்கு கால் வலி. தன்னுடைய வலியை மறப்பதற்காக டாஸ்மார்க்கை தினமும் பார்வையிடுவது அவருடைய வழக்கம்.

அவனுடைய  அம்மாவான என் பாட்டியும் அவருக்கு புத்திமதி சொல்லி, சொல்லி ஓய்ந்து விட்டார். அவருடைய வருமானம் அவர் குடிப்பதற்கே போதவில்லை. வீட்டில் அவர் கண்ணில் காசு தென்பட்டால் நைசாக சுட்டுவிடுவார்.

 இரவாகிவிட்டது.என்றாலும்,குப்பைக்காரன் நாளை காலை வந்து குப்பைகளை அள்ளிக் கொண்டு சென்று விடுவான்.அதுவரை காத்திருக்க முடியாது.விரைவாக குப்பைத் தொட்டிக்குச் சென்று குப்பையைக் கிளறினாள் மீனுக்குட்டி.

குப்பைத் தொட்டியின் அருகே அவளுக்குத் தெரிந்த நாய் ஒன்று வாலை ஆட்டிக் கொண்டு அவளுக்கு உதவ முன்வந்தது. தெரு முழுவதும் அமைதி. அவள் ஒரு நிலையில் குப்பைத் தொட்டியில் முழுவதுமாய் முழுகி விட்டாள் மூக்கைப் பிடித்துக் கொண்டே.மூச்சு சுவாசமே நின்று விடும் போல் இருந்தது.அவ்வளவு துர்நாற்றம்!

இந்த தூய்மை பணியாளர்கள் எப்படித்தான் இதை எல்லாம் சேகரிக்கிறார்களோ? அரைகுறை இருட்டில் கடைசியாக அவள் கையில் தட்டுப்பட்டது அந்த சுருக்குப்பை.அதில் பணம் இருப்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள் மீனுக்குட்டி.

வீட்டிற்குள் வந்த அவள் தலைக்கு ஒரு முழுக்குப் போட்டாள். தன்னுடைய தலையணை உறைக்குள் அந்தச் சுருக்குப்பையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை கண்டிப்பாக ஒரு தையல் எந்திரத்துடன் வீட்டிற்கு வர வேண்டும். சுயமாக தையல் தொழிலைத் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும். ‘நான் ஒரு முதலாளியாக வேண்டும்.அதுதான் என் கனவு. நாளை முதல் நானும் ஒரு முதலாளி.’ மனதிற்குள் உறுதிபட மீனு மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டாள்.

மீனு இனியக் கனவுகளுடன் அன்று இரவு உறங்கத் தொடங்கினாள். அவளுடைய கை தலையனையின் உள்ளே உள்ள சுருக்குப் பையின் மேல் இருந்தது. பக்கத்தில் அவளது பாட்டி அவளது ஏகே 47 இல்லாத பாதுகாவலனாக உறங்காமல்  படுத்திருந்தாள்.


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். பல்வேறு இதழ்களில் 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர், முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துச் சிறந்த கல்விச் சேவையாளராகப் புகழ்பெற்றவர்.