சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!

Sep 07, 2026,01:45 PM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச் செல்வி 


ஒரு காலத்தில் தையல் கலைஞரான வடிவேலுவின் கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஊரிலேயே நாகரிகமான, நேர்த்தியான ஆடைகளைத் தைப்பதில் அவருக்கு நிகர் அவரே.


அவருடைய மகன் கவின், நகரத்தில் ஆடை வடிவமைப்பு படிப்பு முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பியிருந்தான். தந்தையின் பழைய பாணிக்கு மாறாக, புதிய வியாபார உத்தியை ஊருக்குள் கொண்டுவர நினைத்தான்.


ஒருநாள், கவின் தன் நண்பர்களிடம், வியாபாரம் பெருக நாம் ஒரு உத்தியை  கையாளவேண்டும் என்றான்.  சோசியல் நெட்வொர்க் முலம் அதை பரப்ப வேண்டும் என்றான்.


நண்பர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. "இனிமேல்  நாம் உடுத்தும் சாதாரண ஜீன்ஸ் ..லில் ஆங்காங்கே ஓட்டைகள் போடவேண்டும்.  அதை  நாம்  உடுத்திக்  கொண்டு சோசியல் நெட்வொர்க்...ல் பரப்ப வேண்டும். இது தான் இப்போ ட்டிரண்ட் என  நம்ப வைக்க வேண்டும்.  அப்படி பட்ட ஜீன்ஸ் விற்றால்  லாபத்தில்  உங்களுக்கு 20 சதவீதம் தருகிறேன் என்றான். நண்பர்கள் ஊற்சாகமானார்கள்.




நண்பர்கள் ஆங்காங்கே  ஓட்டை போட்ட  மற்றும்  இலேசாக கிழிந்த ஜீன்ஸ் பேண்டுகளைப் போட்டுக்கொண்டு திரிந்தனர். மக்களிடம் அதுதான்  உலகத்தரமான நாகரிகம் என்று விளம்பரம்  செய்தனர். அனைவரிடமும் அது குறித்து விவாதித்தனர். 


அதன்படியே, கிழிந்த ஜீன்ஸ்களை 'ரெடிமேட் பேஷன்' என்று விளம்பரப்படுத்தி அதிக விலைக்கு விற்கத் தொடங்கினான். தொடக்கத்தில் இதைப் பார்த்துச் சிரித்த இளைஞர்கள், சமூக வலைத்தளங்களின் தாக்கத்தாலும்,  சில கவர்ச்சியான விளம்பரங்களாலும் அதை உண்மை என நம்பத் தொடங்கினர். 


"இதுதான் நவீன அழகு, இதுதான் ட்ரெண்ட்" என்று பெருமையாகக் கூறிக்கொண்டு, நல்ல ஆடைகளைக் கூடக் கத்தரியால் கிழித்து அணிய ஆரம்பித்தனர்.


ஒருநாள், ஊரின்  முதியவர் ராமய்யா, பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கே அரைகுறையாகக் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து, அதை நாகரிகம் என்று இறுமாப்போடு பேசிக்கொண்டிருந்த சில இளைஞர்களைக் கண்டார்.


ராமய்யா மெல்லச் சிரித்தபடியே, "தம்பிகளா, எனக்கு ஒரு விஷயம் புரியல..." என்றார். இளைஞர்களில் ஒருவன், "என்ன பெரியவரே, உங்களுக்கு இந்த 'மாடர்ன் பேஷன்' புரியலையா?" என்று கேலியாகக் கேட்டான்.


ராமய்யா அமைதியாகப் பதிலளித்தார்: "இல்லை தம்பி! இந்த நாட்டில் வறுமையின் காரணமாக, உழைத்து நலிந்து போன  எத்தனையோ ஏழை மக்கள் போர்த்திக்கொள்ள உருப்படியான ஆடையின்றி இருக்கிறார்கள்.  சிலர்  வறுமையால் கிழிந்த துணியை அணிந்து கையேந்தும்போது, இந்தச் சமூகம் அவர்களை 'ஏழைகள்' என்றும் 'பிச்சைக்காரர்கள்  என்றும் ஒதுக்கி வைக்கிறது. 


ஆனால், அதே கிழிந்த துணியை ஒரு வியாபாரி , முதலாளி  ஆயிரம் ரூபாய்க்குப்  அழகான பெட்டியில்  கிழிந்த ஜீன்ஸ் பேண்டை  அடைத்து 'பேஷன்' என்று விற்கும்போது, அதை நீங்கள் பெருமையோடு வாங்கிப் போட்டுக் கொண்டு 'அழகு' என்கிறீர்கள்."


"உண்மையில் கிழிந்த ஆடை என்பது வறுமையின் குறியீடு;  ஏழை சமுகத்தின் வலியின் முத்திரை.


வியாபாரியின் பொய் பிரச்சாரத்தை நம்பி, உங்கள் பணத்தையும் இழந்து, வறுமையின் வலியை 'அழகு' என்று கொண்டாடுவது எவ்வளவு பெரிய அறியாமை? பிறர் ஆடையில்லாமல் தவிக்கும்போது, நல்லாடையைக் கிழித்து அணிவது நாகரிகமும் அல்ல, அழகும் அல்ல; அது  இலாபம் பார்க்க வியாபாரம் விரித்த வலையில் நீங்கள் விழுந்த அறியாமை," என்று நிதானமாக எடுத்துரைத்தார்.


ராமய்யாவின் வார்த்தைகளில் இருந்த சமூக நீதியும் , நிதர்சனமான உண்மையும் அங்கிருந்த இளைஞர்களின் மனதைத் தைத்தது. ஆடை வடிவமைப்பாளர்களின் லாப வெறிக்காக, தங்கள் சுயபுத்தியை இழந்து கிழிந்த துணியை, நாகரிகம் என்று நம்பிய தங்கள் அறியாமையை எண்ணி அவர்கள் தலைகுனிந்தனர்.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்