Monday Motivation: எழுதுகோலின் விண்ணப்ப மனுவும்... மறுமொழியும்!

Su.tha Arivalagan
Jul 27, 2026,10:45 AM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


என் பேனா என்னிடம் சொல்லியது..

உன் எண்ணங்களை என் மூலம்

எழுத்தில் வடித்திடும் உன்னிடம் 

ஓர் விண்ணப்பம் அல்லது எச்சரிக்கை!


உன் வலிகளுக்கு வடிவம் தரும் 

முயற்சிகளின் போதெல்லாம் என் 

இதயத்தின் இரத்தக் கசிவுகளே 

வார்த்தைகளுக்கு வர்ணம் சேர்க்கிறது...!


என்னுடைய மேலான வேண்டுகோள் என்னவெனில், 

உன் ஆணவங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே

எளிமையான பணி எனக்கு!


அதைத் தவிர்த்த உன்

உள்ளக்கிடக்கைகளை என் வாயிலிருந்து 

பிடுங்கும் முயற்சியைக் கைவிடு!


பெருங்கவிஞராக வேண்டும் என்ற 

முயற்சியில் உன் உளறல்களை

என்னால் சகிக்க முடியவில்லை!


அதைவிட எளிதானது உன் 

ஆன்மாவின் ஆணவங்களைப் படியெடுப்பது!




உன் கவிதை முயற்சியைவிட மேலானது 

உன் நாட்குறிப்பின் பக்கங்களை 

நிறைத்திடும் பதிவுகளே!


ஆனால் நீயோ நாட்குறிப்பை

ஆண்டின் ஆரம்பத்தில் எழுதத் 

துவங்குவாய்...

அத்தோடு சரி!


ஏன் அன்றாடம் நாட்குறிப்பு 

எழுதுவதில்லை?? என்ற வினாவிற்கு...


இரகசியங்கள் பல தாங்குபவை 

நாட்குறிப்புப் புத்தகங்கள்...!


எனைத் தவிர என் இரகசியத்தை வேறு எவரேனும் 

அறிந்திடுவரோ?? எனும் மனக்கலக்கமே 

நாட்குறிப்பேட்டைத் தவிர்த்தலின் காரணம்!


அவரவர் இரகசியங்கள் 

அவரவர் நெஞ்சோடு!


ஆண்டுகள் பல கடந்த பின் 

அறியப்படும் இரகசியங்கள் 

அடுத்த தலைமுறைக்கு வேண்டுமானால் 

சுவாரஸ்யப்படலாம்!


ஆனால்...


குறுகிய காலத்தில் அறியப்பட்டால் 

சில நேரங்களில் சங்கடத்தில் 

மாட்டி வைக்கும் பெரும்பூதங்கள் அவை!


அவரவர் இரகசியங்கள் 

அவரவர் நெஞ்சோடு!


அதுவும் சரிதான் 

இந்த நாரதர் வேலை 

எனக்கெதற்கு?!


சகுனி வேலையாய் 

மாறினாலும் மாறி விடலாம்!


ஹ்ம்... 

சகுனியாவதைவிட சகிப்புத்தன்மையை 

வளர்த்துக் கொள்வதே மேல்!


என் விண்ணப்பத்தைத் திரும்பப் 

பெற்றுக் கொண்டேன்! 


இப்படிக்கு, 

உன் பிரிய எழுதுகோல்...!


குறிப்பு :


இனி உன் விருப்பம் எதுவோ

அதை என் விருப்பமாகக் கருதி 

பணியாற்ற என்னால் இயலும்!


உன் எண்ணங்களுக்கு வர்ணம் சேர்க்கும் 

பணியும் இனி எனக்கு உவப்பே!


உன் உளறல் முயற்சியும் இனி 

உரமான எழுத்தாக்க 

என் தடையேதும் இனியில்லை!


என் பேனா உடனான 

எனது மறுமொழி உரையாடல்...!


என்ன சொல்கிறாய்???


எதை நீ என் ஆணவம் என்கிறாய்...? 

எனதருமை எழுதுகோலே!


"நான் எழுதிய கவிதை 

எப்படி உள்ளது?!" 

என உனக்கு அறிமுகமான 

அனைவரிடமும் காட்டிக் காட்டிப் 

பெருமிதத்தில் பூரிப்பாயே!


அதைத்தான் சுட்டுகின்றேன்...


இதில் எங்கு ஆணவம் வந்தது

என் பேனாவே..???


ஆஹ்... நீயா எழுதினாய்?


நானல்லவோ எழுதும் பணியாளன்!?


என் பணிக்குப் பாராட்டு உனக்கா???


இது நியாயமா? நேர்மையா?

நீயே சிந்தித்து பதில் கூறு...?!


ஓஹோ...! எழுதுவது நீயானபோதிலும் 

சிந்தனை என்னுடையது அல்லவா??


இப்போது யாருக்கு ஆணவம்..??


பேனாவே...


உனக்கா??? 

அல்லது 

எனக்கா???


மௌனத்தில் வெட்கித் தலைகுனிந்த

எனதருமை எழுதுகோல்... 


உண்மை உணர்ந்த காரணத்தால்...


இப்போதெல்லாம் வெகுசமர்த்தாய்

குனிந்த தலை நிமிராது...


எனக்காய் என் எண்ணங்களை

வெகுநேர்த்தியாய்.... படியெடுக்கும் 

பணியை பவ்யமாய்த் தொடர்கிறது...!


பணிவோடு தொடர்ந்து

எப்போதும் எழுதிக் குவிக்கிறது...!


மனதின் மாயையை எழுத்தில் வடித்துக் கொடுக்கும் 

எனது எழுதுகோலெனும் நண்பனுக்கு நன்றி!!!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).