ரஷ்ய அதிபரின் டெல்லி வருகை...தாறுமாறாக ஏறிய ஹோட்டல் கட்டணங்கள்
டெல்லி : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு டெல்லியில் ஹோட்டல் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.
புடின் டெல்லிக்கு ஒரு பெரிய குழுவுடன் வர உள்ளார். இதனால் இந்த வாரம் ஹோட்டல்கள் முழுமையாக நிரம்பி வழிகின்றன. மேலும், அறைகளின் வாடகையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பாரத் மண்டபத்தில் நடைபெறும் வரி விதிப்பு மாநாடு, யசோபூமியில் நடைபெறும் பேப்பர் எக்ஸ்போ, யுனெஸ்கோ கூட்டம் மற்றும் திருமணங்கள் போன்ற பல முக்கிய நிகழ்வுகள் காரணமாக, இந்த வார இறுதியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சாதாரண அறைகளின் வாடகை ரூ.85,000 முதல் ரூ.1.3 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
புடின், ஐடிசி மௌரியா ஹோட்டலில் உள்ள 4,700 சதுர அடி பரப்பளவு கொண்ட 'கிராண்ட் பிரசிடென்ஷியல் சூட்'டில் தங்குகிறார். இந்த சூட், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முன்னோடிகளான ஜோ பைடன், பில் கிளிண்டன் போன்ற முக்கிய உலகத் தலைவர்கள் தங்கியிருந்த இடமாகும். இந்த இரண்டு படுக்கையறை சூட்டில் வரவேற்பு அறை, படிக்கும் அறை, 12 பேர் அமரக்கூடிய தனி உணவு அறை, மினி-ஸ்பா மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற பல வசதிகள் உள்ளன. அமெரிக்க அதிபர்கள் விரும்பிச் சென்ற புகழ்பெற்ற புகாரா உணவகம் மற்றும் டம்-புக்த் உணவகம் ஆகியவை ரஷ்ய அதிபர் மற்றும் அவரது குழுவினருக்காக சிறப்பாக உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஹோட்டலில் இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்துள்ளன.
டெல்லியின் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் சூழலில், வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் முன்கூட்டியே வரும் குழுக்கள், ஹோட்டல்களின் காற்று சுத்திகரிப்பு அமைப்புகளின் வலிமை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை கவனத்தில் கொள்கின்றன. ரஷ்ய பிரதிநிதிகள் அடுத்தடுத்துள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலிலும் அறைகளை எடுத்துள்ளனர். தாஜ் பேலஸ், தாஜ் மஹால், ஓபராய், லீலா மற்றும் மௌரியா போன்ற டெல்லியின் மையப்பகுதியில் உள்ள அனைத்து முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் இந்த வார இறுதியில் முழுமையாக நிரம்பிவிட்டன.