அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

Su.tha Arivalagan
Jun 26, 2026,05:09 PM IST

நியூயார்க்: உலகக் கோப்பை 2026 தொடரில் நடந்த ஒரு மரண மாஸ் ட்விஸ்ட் உலகக் கால்பந்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது. குரூப் 'இ' பிரிவில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், 4 முறை உலக சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈக்வடார் அணி வரலாற்று சாதனை படைச்சிருக்கு.


இந்தத் தோல்வியிலிருந்து இன்னும் ஜெர்மனி ரசிகர்கள் மீளவில்லை. அவர்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. மறுபக்கம் ஈக்வடார் உலகத்தின் உச்சிக்குப் போய் விட்டது. சந்தோஷத்திலிருந்து இன்னும் அவர்கள் வெளிவரவே இல்லை. நாடே உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.


இந்த அசாத்திய வெற்றியைக் கொண்டாடும் விதமாக, ஈக்வடார் நாட்டு மக்களுக்கு இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிச்சிருக்கார் அந்த நாட்டு அதிபர் டேனியல் நோபோவா. 


நியூயார்க் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், ஆரம்பத்தில் இருந்தே அனல் பறந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே (லெராய் சானே அடித்த கோலால்) ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால், இதைப் பார்த்து ஈக்வடார் சற்றும் அசரவில்லை.




ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலேயே ஈக்வடாரின் நில்சன் அங்குலோ ஒரு லாங்-ரேஞ்ச் ஷாட் மூலம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். விறுவிறுப்பாகச் சென்ற ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில், கொன்சாலோ பிளாட்டா ஈக்வடார் அணிக்கான 2-வது வெற்றிக் கோலை அடித்து ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தார்.


கடைசி கட்டத்தில் ஜெர்மனி எவ்வளவு போராடியும் ஈக்வடாரின் டிஃபென்ஸை உடைக்க முடியல. இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஈக்வடார் மாபெரும் வெற்றி பெற்றது.


இந்த அசுரத்தனமான வெற்றியால் குஷியான அதிபர் டேனியல் நோபோவா தனது எக்ஸ் பக்கத்தில், "விமர்சனங்கள், அவமானங்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து, ஒட்டுமொத்த நாட்டிற்கும் இவ்வளவு பெரிய மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்த வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் எனது நன்றிகள். நாளை நம் நாட்டிற்கு விடுமுறை! ஈக்வடார் வாழ்க!" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


இந்த வெற்றியின் மூலம் ஈக்வடார் அணி உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு முன்னதாக 2006-ல் தான் அந்த அணி நாக்-அவுட் சுற்றுக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.